காமராஜரின் 117 ஆவது பிறந்த நாளையொட்டி துடியலூரை அடுத்த அசோகபுரசத்தில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவில் ஆசிரியை என்.உமாவதி வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியை ஜி.பி.சத்யாபாமா முன்னிலை வகித்தார். கோவை மாவட்டக் கல்வி அதிகாரி கீதா விழாவுக்கு தலைமை வகித்து பேசும்போது, காமராஜர் கல்வி முன்னேற்றத்துக்காக செய்த சாதனைகளைப் பட்டியலிட்டு பேசினார்.
இதனையடுத்து, செந்தமிழ் அறக்கட்டளையின் தலைவர் லி.கனகசுப்பிரமணி காமராஜரின் குணநலன்கள், தலைமைப் பண்பு குறித்து உரையாற்றினார். பள்ளித் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கீதா பரிசு வழங்கிப் பாராட்டினர். தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இறுதியாக பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. பள்ளி ஆசிரியை ஆர்.கீதா நன்றி கூறினார்.