கோயம்புத்தூர்

முதலீட்டுக்கு அதிக லாபம் தருவதாகக் கூறி ரூ.6 கோடி வரை மோசடி செய்தவர் கைது

15th Jul 2019 09:38 AM

ADVERTISEMENT

தொழிலில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகக் கூறி 30-க்கும் மேற்பட்டோரிடம் ரூ.6 கோடி வரை மோசடி செய்தவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
 திருப்பூர் மாவட்டம், பல்லடம் அறிவொளி நகரைச் சேர்ந்தவர் சுகுமார். இவர் கொசுவர்த்தி தயாரிப்புக்குத் தேவையான மூலப்பொருள்கள் விற்பனை செய்யும் நிறுவனம் வைத்து தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு நண்பர் ஒருவர் மூலமாக குனியமுத்தூரைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் அறிமுகமானார். லேத் பட்டறை வைத்து தொழில் செய்து வரும் செந்தில்குமார், ஜெர்மனியில் தனக்குத் தெரிந்த நிறுவனத்தில் ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் ரூ.1 கோடி வரை முதிர்வுத் தொகை பெற்றுத் தருவதாக உறுதி அளித்துள்ளார். 
 இதை நம்பிய சுகுமார் 2015ஆம் ஆண்டில் இருந்து சிறிது சிறிதாக ரூ.1.25 கோடி வரை முதலீடு செய்துள்ளார். இந்நிலையில் முதிர்வுக்காலம் முடிந்தும் செந்தில்குமார் பணம் பெற்றுத் தராமல் இருந்துள்ளார். இதுகுறித்து கேட்டபோது ஜெர்மனியில் நிர்வாகப் பிரச்னை காரணமாக பணம் கிடைக்கவில்லை எனக் கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த சுகுமார், செந்தில்குமார் குறித்து விசாரித்தபோது, அவர் இதுபோல 30-க்கும் மேற்பட்ட நபர்களிடம் ரூ.6 கோடி வரை மோசடி செய்திருப்பது தெரியவந்தது. 
இதையடுத்து செந்தில்குமார் மீது கோவை மாநகர குற்றப்பிரிவு போலீஸாரிடம் சுகுமார் புகார் அளித்தார். இந்தப் புகாரின்பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து சுகுமாரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT