கோயம்புத்தூர்

கோயில்களில் தரிசனக் கட்டணத்தை ரத்துசெய்ய வலியுறுத்தி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

15th Jul 2019 09:41 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்து முன்னணி அமைப்பினர் கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
 கோவை சிவானந்தா காலனியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணியின் மாவட்ட தலைவர் கே.தசரதன் தலைமை வகித்தார்.
 இதில், இந்து சமய அறநிலையத் துறை இந்து கோயில்களை விட்டு வெளியேற வேண்டும், தரிசனத்துக்கு பணம் வாங்கிக்கொண்டு கடவுளை காட்சிப்பொருளாக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
 அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில அமைப்பாளர் பக்தவச்சலம், கோயில்களின் சொத்துகளை நிர்வகிப்பதில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
 இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் கிஷோர் குமார், மாநில நிர்வாக குழு உறுப்பினர் செந்தில்குமார், குணா, செய்தி தொடர்பாளர் தனபால் உள்பட பலர் பங்கேற்றனர்.
மேட்டுப்பாளையத்தில்: மேட்டுப்பாளையம், காரமடைப் பகுதிகளில் இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேட்டுப்பாளையம் பேருந்து  நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கோவை கோட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட செயலாளர் சதீஸ்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.வி.ராஜா ஆகியோர் முன்னிலை  வகித்தனர். முன்னதாக வடக்கு மாவட்ட துணைத் தலைவர் ஆர்.தங்கவேல் வரவேற்றார்.
 காரமடை நகர், கிழக்கு, மேற்கு ஒன்றியம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சிவப்புகழ் தலைமை வகித்தார். நகரத் தலைவர் குமார் வரவேற்றார். இதில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் செந்தில்குமார் சிறப்புரையாற்றினார். இதில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
 அன்னூரில்: அன்னூர் பயணியர் மாளிகை முன்பு இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாவட்ட செயலாளர் குட்டி (எ) ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கார்த்தி, ஒன்றியத் தலைவர் மாரப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பேச்சாளர் மனோகரன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
சூலூரில்: சூலூர் அண்ணா சீரணி கலையரங்கம் அருகில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு திருப்பூர் மாவட்ட தலைவர் ஆர்.எம் சுப்பிரமணியம் தலைமை வகித்தார். திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். சூலூர் நகர செயலாளர் பிரகாஷ் வரவேற்றார். கோவை கோட்ட செயலாளர் சதீஷ்குமார் சிறப்புரையாற்றினார். பாப்பம்பட்டி பிரிவு பொறுப்பாளர் உதயகுமார் நன்றி கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT