கோயம்புத்தூர்

பொள்ளாச்சியில் 5 வயது சிறுமி சாவில் மர்மம்: மருத்துவமனையில் உறவினர்கள் மோதிக் கொண்டதால் பரபரப்பு

12th Jul 2019 07:44 AM

ADVERTISEMENT

பொள்ளாச்சியில் 5 வயது சிறுமியின் சாவில் சந்தேகம் இருந்ததால் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவமனையில் சிறுமியின் உறவினர்கள் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி, மரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வி (27). இவரது கணவர் சின்ராஜ் (30). இவர்களுக்கு மோனிஷா (5) என்ற பெண் குழந்தை இருந்தது. அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் மோனிஷா ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். செல்வி கணவரைப் பிரிந்து மரப்பேட்டையில் உள்ள பெற்றோர் வீட்டில் மோனிஷாவுடன் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. பொள்ளாச்சியை அடுத்த கொங்கல்நகரம் பகுதியில் சின்ராஜ் வசித்து வருகிறார். 
இந்நிலையில், சிறுமி மோனிஷாவின் உடல்நிலை வியாழக்கிழமை அதிகாலை 5 மணியளவில் பாதிக்கப்பட்டதாகக் கூறி பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் சிகிச்சைக்குக் கொண்டு சென்றுள்ளனர். சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். 
சிறுமியின் உயிரிழப்பில் மருத்துவர்களுக்கு சந்தேகம் எழுந்ததால் உடலை பிரேதப் பரிசோதனை செய்ய முடிவு செய்து கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்குப் பரிந்துரை செய்தனர்.    சிறுமி உயிரிழந்த தகவல் அறிந்து நூற்றுக்கு மேற்பட்ட உறவினர்கள் மருத்துவமனையில் திரண்டு, உடலை பொள்ளாச்சி மருத்துவமனையிலேயே பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் திரண்டதால் பொள்ளாச்சி டிஎஸ்பி சிவகுமார், இரண்டு காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 35க்கும் அதிகமான போலீஸார் மருத்துவமனையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
மருத்துவர்கள், வருவாய்த் துறையினர், போலீஸார் ஆகியோர் சிறுமியின் உறவினர்களுடன் பேச்சு நடத்தி, கோவை அரசு மருத்துவமனையில்தான் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். ஆனால், சிறுமியின் உறவினர்கள், பொள்ளாச்சி அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக இருந்தும் ஏன் வேறு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்புகிறீர்கள் என்று கூறி அவர்களிடம் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து, எஸ்.பி. சுஜித்குமார் வாயிலாக பொள்ளாச்சியில் பிரேதப் பரிசோதனை செய்ய கோவையில் இருந்து மருத்துவரைக் கேட்டு மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
கோவையில் இருந்து மருத்துவர் வருவதற்குள் சிறுமியின் தாய் செல்வி மற்றும் தந்தை சின்ராஜின்  உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் வாக்குவாதம் செய்துகொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் குழுவாக மோதிக்கொண்டதால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 
டிஎஸ்பி சிவகுமார் தலைமையில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் மோதலில் ஈடுபட்டவர்களைத் தடுத்து எச்சரித்தனர். மேலும் கூட்டத்தைக் கலைத்து பலரை வெளியேற்றினர். 
 மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி உத்தரவின்பேரில் கோவை அரசு மருத்துவமனையின் சட்டம் சார்ந்த மருத்துவத் துறை பேராசிரியர் பேரானந்தம் சிறுமியின் உடலை  பிரேதப் பரிசோதனை செய்வதற்கு மாலை வந்தார். பிரேதப் பரிசோதனைக்குப் பின் உடல் தாயிடம் ஒப்படைக்கப்பட்டது.
 சிறுமியின் உயிரிழப்பில் மர்மம் ஏதும் இல்லை என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இருந்தபோதும், பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்தபிறகே முழுவிபரம் தெரியவரும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT