கோயம்புத்தூர்

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம்: சிறப்பு முகாமில் 1,060 பேர் விண்ணப்பிப்பு

12th Jul 2019 07:46 AM

ADVERTISEMENT

கோவை மாவட்டத்தில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் பயனாளிகளை சேர்க்க அண்மையில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 1,060 விவசாயிகள் விண்ணப்பித்துள்ளனர்.
சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. உதவித்தொகை மூன்று காலாண்டுகளில் 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ. 2 ஆயிரம் வீதம் வழங்கப்படுகிறது. அதன்படி, கோவை மாவட்டத்தில் டிசம்பர் - மார்ச் மற்றும் ஏப்ரல் - ஜூலை என இரண்டு தவணைகளில் 42 ஆயிரம் விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில் சிறு, குறு விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை பெரிய விவசாயிகளுக்கும் வழங்குவதாக மக்களவை தேர்தலுக்குப்பின் மத்திய அரசு அறிவித்தது. இதனால் இத்திட்டத்தில் விடுபட்ட விவசாயிகளையும், பெரிய விவசாயிகளையும் இணைக்கும் பணிகளை வேளாண், தோட்டக் கலை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் வேளாண் துறை கணக்கெடுப்பின்படி 1 லட்சத்து 29 ஆயிரத்து 854 விவசாயிகள் உள்ளனர். இதில் இதுவரை 64 ஆயிரம் விவசாயிகள் பதிவு செய்யப்பட்டு, 42 ஆயிரம் விவசாயிகளுக்கு உதவித்தொகை இரண்டு தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள விவசாயிகளை இணைக்கும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 
அதன்படி, கடந்த ஜூலை 9 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற சிறப்பு முகாமில் 1,060 விவசாயிகள் விண்ணப்பம் அளித்துள்ளனர். 
சிறு, குறு, மற்றும் பெரிய விவசாயிகள் அனைவரும் தகுதியானவர்கள் என்றாலும், வருமான வரி கட்டுபவர்கள், அரசு ஊழியர்கள், ரூ. 10 ஆயிரத்துக்கு மேல் ஓய்வு ஊதியம் பெறுபவர்கள் இத்திட்டத்தில் உதவித்தொகை பெறுவதற்கு தகுதியவற்றவர்கள். 
இத்திட்டம் அனைத்து விவசாயிகளுக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் தொடர்ந்து தகுதியானவர்களை வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை மற்றும் வருவாய்த் துறை அலுவலகங்களில் பதிவு செய்து வருகின்றனர். விடுபட்டுள்ள விவசாயிகள் அனைவரும் தங்களது பெயர்களை பதிவு செய்துக்கொள்ள வேளாண் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT