ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையைக் கண்டித்து டிஆர்இயூ தொழிற்சங்கத்தினர் கோவை ரயில் நிலையம் முன்பு வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களவையில் பட்ஜெட்டை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார். இதில் ரயில்வே துறையின் வளர்ச்சிக்காக தனியார் பங்களிப்பு அவசியமாக உள்ளது. எனவே தனியார் முதலீடு அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதைக் கண்டித்து தட்சிண ரயில்வே ஊழியர்கள் சங்கத்தினர் (டிஆர்இயூ) ரயில் நிலையத்தின் பிரதான நுழைவு வாயில் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு டிஆர்இயூ கிளைச் செயலர் சுரேஷ் தலைமை வகித்தார். இதில் மண்டல துணைத் தலைவர் சாம்பசிவம், தங்கவேல், காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் கோட்ட செயலாளர் துளசிதரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். முன்னதாக மத்திய அரசின் தனியார்மய நடவடிக்கையை கண்டித்து சிஐடியூ மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றினார். இதில் ரயில்வே ஊழியர்கள், சிஐடியூ நிர்வாகிகள் திரளாக பங்கேற்று மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.