கோவை, வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள ஆதி திராவிடர் நல விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக மாணவர்கள் அளித்த புகாரின்பேரில், விடுதி சமையலரை, மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி பணியிடை நீக்கம் செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.
வெள்ளக்கிணறு பகுதியில் ஆதி திராவிடர் நல விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஐடிஐ மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்த விடுதியில், நாகராஜ் என்பவர் சமையலராகப் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு விடுதியில் உணவு தரமற்ற முறையில் உள்ளதாகவும், சம்பந்தப்பட்ட சமையலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விடுதி மாணவர்கள், மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணியிடம் புகார் மனு அளித்தனர்.
அதைத் தொடர்ந்து, விடுதியில் ஆய்வு நடத்திட அதிகாரிகளுக்கு, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதன்பேரில் வடக்கு வட்டாட்சியர் மகேஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் ஆதி திராவிடர் நல விடுதியில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். அதில், மாணவர்களுக்கு தரமான உணவு வழங்கவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டது.
இது தொடர்பான அறிக்கை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதையடுத்து, ஆதி திராவிடர் நல விடுதி சமையலர் நாகராஜை பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும், விடுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஆதி திராவிடர் குடியிருப்பு மேம்பாட்டுத் துறைக்கு மாவட்ட ஆட்சியர் பரிந்துரைத்துள்ளார்.