கோயம்புத்தூர்

மத்திய பட்ஜெட்: தொழில் நிறுவனத்தினரின் வரவேற்பும்... ஏமாற்றமும்...

6th Jul 2019 09:44 AM

ADVERTISEMENT

மத்திய அரசின் பட்ஜெட் குறித்து கோவையைச் சேர்ந்த தொழில் நிறுவனத்தினர் வரவேற்பு மற்றும் ஏமாற்றம் என இருவித கருத்துகளை தெரிவித்துள்ளனர். 
குறிப்பாக சிறு, குறுந்தொழில் நிறுவனத்தினர் பட்ஜெட்டில் தங்களுக்கென சிறப்பு அறிவிப்புகள் இல்லாததால் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
கோவை கொடிசியா தலைவர் ஆர்.ராமமூர்த்தி: பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ.70 ஆயிரம் கோடி முதலீடு வழங்குதல், புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உத்தேசித்துள்ள ஏஞ்சல் வரி, வருமான வரித் துறை சரிபார்ப்பு தேவையில்லை என்ற அறிவிப்பு, சிறு குறு தொழில் நிறுவனங்கள் வசூலிக்கும் தொகையைத் தாக்கல் செய்ய அளித்துள்ள கால அவகாச நீட்டிப்பு, மகளிருக்கு வட்டியில்லா கடன் திட்டம், முறைசாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.3ஆயிரம் ஓய்வூதியம் உள்ளிட்ட அறிவிப்புகள் வரவேற்புக்குரியது. அதேநேரத்தில், பெட்ரோல், டீசல் வரி உயர்வு போக்குவரத்து கட்டணங்களை உயரச்செய்யும், பெரு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி, ஆண்டு வணிகத்தில் 25 சதவீதம் என்ற வரையறை இருப்பதை தனி உரிமையாளர், பங்குதாரர்களைக் கொண்டுள்ள சிறு, குறு, மத்திய தொழில் நிறுவனங்களுக்கு நீட்டிக்க வேண்டும், ஜாப் ஆர்டர் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும்.
 கோவை சிட்கோ உற்பத்தியாளர்கள் நலச் சங்கத் (கொசிமா) தலைவர் எஸ்.சுருளிவேல்:
சிறு, குறு தொழில்களை பலப்படுத்த வட்டியில் 2சதவீத சலுகை அளிப்பதற்காக ரூ.350 கோடி ஒதுக்கீட்டை அதிகப்படுத்தியிருக்கலாம். ரூ. 400 கோடி வரை வர்த்தகம் செய்யும் நிறுவனங்களுக்கு 25 சதவீத வரிவிதிப்பு ஏமாற்றமளிக்கிறது. இதை 20 சதவீதமாக குறைத்திருக்க வேண்டும். நஊமதபஐ திட்டத்தின் கீழ் மேலும் புதிய 100 கிளஸ்டர்கள் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு கிராமத் தொழில்களை உருவாக்கும். புதிய தொழில் தொடங்குவோரை ஊக்குவிக்கும் வகையில் ஏற்கெனவே தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு வரி கண்காணிப்பில் விலக்கு அளிக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக பார்க்கையில் இந்த நிதிநிலை அறிக்கை கொசிமாவுக்கும், சிறு, குறு தொழில் முனைவோருக்கும் ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளது.
 தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கத் (சீமா) தலைவர் வா.கிருஷ்ணகுமார்:
 பாரத் மாலா, சாகர் மாலா, உதான் திட்டங்கள் கிராமப்புற மற்றும் நகரங்களை இணைக்கிறது. இது நமது நாட்டின் சாலை வசதிகளை மேம்படுத்தும். இந்திய ரயில்வே துறையை மேம்படுத்த தனியார் பங்களிப்புடன் நாட்டின் புறநகரங்களை இணைக்கும் முயற்சியை மேற்கொள்ளவும், இந்திய ரயில்வே துறையை மேம்படுத்த 2018-30 ஆம் ஆண்டு வரை ரூ.50 லட்சம் கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. உழவர்களுக்கான ஜீரோ பட்ஜெட் திட்டத்தின் மூலம் அவர்களது வருவாய் இரட்டிப்பாகும். ஜல் சக்தி திட்டத்தின் கீழ் நாட்டின் நீர்நிலைகளைப் பாதுகாக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் வரவேற்புக்குரியது. ஆனால், சிறு, குறு தொழில் வளர்ச்சிக்குத் தேவையான அறிவிப்புகள் எதுவும் பட்ஜெட்டில் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது. பெட்ரோல் விலை குறைப்பு, ஜாப் ஆர்டர்கள் மீதான ஜிஎஸ்டி வரி சதவீதத்தை குறைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
 தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்க மாவட்டத் தலைவர் ஜேம்ஸ்:
 2019-20 ஆம் ஆண்டுக்கான இந்த பட்ஜெட் சிறு, குறு தொழில்களின் வளர்ச்சிக்கு உகந்ததாக இல்லை. உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் வசூலிக்கும் ஜிஎஸ்டி தொகையை 3 மாதத்துக்குள் செலுத்த வழங்கிய கால அவகாசத்தைத் தவிர வேறு எந்தப் புதிய அறிவிப்பும் சிறு, குறு தொழிலாளர்களுக்கு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. ஜாப் ஆர்டர்களுக்கான ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு, வங்கி கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு, கோவையில் ராணுவத் தளவாடம் தயாரிக்கும் பொதுத் துறைக்கான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. இதேபோல சிறு, குறு தொழிலுக்கான தொழில் பேட்டை குறித்த அறிவிப்பும் இடம்பெறவில்லை. மொத்தத்தில் உள்நாட்டு தொழில் வளர்ச்சிக்கு வழிவகுக்காத பட்ஜெட்டாக உள்ளது.
இந்தியன் டெக்ஸ்பிரணர்ஸ் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன்: பெண்கள் முன்னேற்றத்துக்கான திட்டங்களைக் கண்டறிந்து, செயல்படுத்தும் வகையில் அரசும், தனியார் துறையும் இணைந்து ஒரு சிறப்புக் குழுவை அமைப்பது என்ற திட்டம் வரவேற்புக்குரியது.  தற்போது வேலை வாய்ப்பில் பெண்களின் பங்கு 26 சதவீதம் ஆக உள்ளது. ஒப்பீட்டளவில், வியத்நாமில் 73சதவீதமும், சீனாவில் 62 சதவீதமும் உள்ளது. இந்திய ஜவுளித் துறையில் பெண்களின் பங்களிப்பு 40 சதவீதம் ஆகும். ஆகவே, ஜவுளி உற்பத்தித் துறையில் பெண்கள் பங்களிப்பை அதிகரிப்பதன் மூலம் பொருளாதாரத்தை உயர்த்த முடியும். மேலும், சிறு, குறு நிறுவனங்களுக்கு 2019-20ஆம் ஆண்டில் வட்டி சலுகைக்காக ரூ.350 கோடியை ஒதுக்கி இருப்பது பாராட்டுக்குரியது.
இந்திய தொழில் கூட்டமைப்பின்(சிஐஐ) ஒருங்கிணைப்பாளர் ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன்:
இந்த பட்ஜெட் நாட்டின் வளர்ச்சி, தொலைநோக்குப் பார்வையோடு தயார் செய்யப்பட்ட பட்ஜெட்.  விவசாயம்,  எம்எஸ்எம்இ, ஸ்டார்ட் அப், டிஜிட்டல் இந்தியா போன்ற பல்வேறு துறைகளின் முன்னேற்றத்துக்கான திட்டங்களால் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும். அரசு பொதுத் துறை வங்கிகளில் ரூ. 70 ஆயிரம் கோடி மூலதனமாக முதலீடு செய்ய அறிவித்திருப்பது வங்கிகள் கொடுக்கும் கடன் தொகையை அதிகரிக்க உதவும். ஆனால் வங்கி அதிகாரிகளுக்கு கடன் கொடுப்பதில் இருக்கும் தயக்கத்தையும் அச்சத்தையும் தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மொத்தத்தில் இது பாராட்டத்தக்க வரவேற்கக்கூடிய பட்ஜெட்.
 கோவை பம்ப்செட் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பாளர் சங்க (கோப்மா) தலைவர் கே.மணிராஜ்:
 பான் அட்டை இல்லாமல் ஆதார் அட்டையை வைத்து வருமான வரி செலுத்தலாம், ஒரே நாடு- ஒரே மின்வழிப் பாதை, 75 ஆயிரம் நபர்களைத் தேர்வு செய்து தொழில் முனைவோராக மாற்றுவது, மத்திய அரசு சார்பில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது.
  ஆனால், 59 நிமிடங்களில் ரூ.1 கோடி வரை குறுந்தொழில் முனைவோருக்கு கடன் வழங்கும் திட்டம் ஏற்கெனவே நடைமுறையில் தோல்வியடைந்த திட்டம். ஆகவே மீண்டும் அதையே செயல்படுத்துவோம் என அறிவித்திருப்பது தொழில்முனைவோரை ஏமாற்றும் செயலாக உள்ளது.  ஸ்மார்ட் சிட்டி என்று அறிவிக்கப்பட்ட தொழில் நகரமான கோவைக்கு புதிய ரயில்களோ, ரயில் நிலைய மேம்பாட்டுத் திட்டங்களோ அறிவிக்கப்படாதது கோவையை புறக்கணிக்கும் செயல்.
 கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர் எஸ்.ரவிக்குமார்:
 தனி நபர் வரி உச்சவரம்பு உயர்வு பற்றிய அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. மொத்தத்தில் சில அம்சங்கள் வரவேற்கக்கூடியதாக இருந்தாலும் இது குறுந்தொழில் முனைவோருக்கு ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT