கோவை மாவட்டம், பொள்ளாச்சி வனச் சரகத்தில் பெண் யானை உயிரிழந்தது குறித்து வனத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி, திருப்பூர் என இரண்டு கோட்டங்களாகவும், பொள்ளாச்சி, உலாந்தி, மானாம்பள்ளி, வால்பாறை, உடுமலை, அமராவதி என ஆறு வனச் சரகங்களாகவும் ஆனைமலை புலிகள் காப்பகம் பிரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இங்கு புலி, சிறுத்தை, யானை, காட்டுமாடு, ராஜநாகம், பல்வேறு வகையான மான்கள், பறவைகள் என பல்லுயிரிகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில், பொள்ளாச்சி வனச் சரகம் பருத்தியூர் பகுதியில் யானை ஒன்று உயிரிழந்துகிடப்பதாக வனத் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனச் சரக அலுவலர் காசிலிங்கம், வனப் பாதுகாப்புப் படை அலுவலர் மணிகண்டன் தலைமையிலான வனத் துறையினர் அங்கு சென்று பார்வையிட்டனர்.
அதைத் தொடர்ந்து வனத் துறையினர் கூறுகையில், இறந்தது பெண் யானை ஆகும். உயிரிழந்து சில நாள்கள் ஆகியுள்ளன. யானை இறந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.