கோவை அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்ற இளைஞர் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவை, சரவணம்பட்டி, பாரதி நகர் அருகே தனியார் வங்கி ஏடிஎம் உள்ளது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை ஏடிஎம் மையத்தின் கண்ணாடி கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து பொதுமக்கள் சரவணம்பட்டி போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் ஏடிஎம் மையத்துக்குள் இருந்த கண்காணிப்பு கேமராப் பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதில், 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் முகத்தை துணியால் மூடியபடி உள்ளே நுழைந்து ஏடிஎம் மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் கருப்பு மை போன்ற திரவத்தைப் பூசுவது தெரியவந்தது.
இதையடுத்து சுமார் 15 நிமிடங்கள் வரை ஏடிஎம் இயந்திரத்தை அந்த இளைஞர் உடைக்க முயன்று, முடியாமல் போனதையடுத்து அங்கிருந்த திரும்பிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாததால் அதில் இருந்த ரூ.2.82 லட்சம் பணம் தப்பியது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அந்த நபர் தனது இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும் காட்சிகள் ஏடிஎம் மையத்தின் எதிர்புறம் உள்ள கடையில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருந்தது தெரியவந்தது. இந்தச் சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.