கோயம்புத்தூர்

4 ஆண்டுகளுக்குப் பிறகு மாநகராட்சியில் மீண்டும் குறைகேட்புக் கூட்டம்: மெழுகுவர்த்தியுடன் மனு அளிக்க வந்த  மகளிர்

4th Jul 2019 07:23 AM

ADVERTISEMENT

கோவை மாநகராட்சியில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் குறைகேட்புக்  கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், தெருவிளக்குகள் எரியாததைக் கண்டித்து மகளிர் மெழுகுவர்த்தியை ஏந்திவந்து மனு அளித்தனர். 
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுவதைப்போல கோவை மாநகராட்சியிலும் மக்கள் குறைகேட்புக் கூட்டம் நடத்த வேண்டும் என மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து ஜூலை மாதம் முதல் வாரம்தோறும் புதன்கிழமைகளில் மாநகராட்சியில் மக்கள் குறை கேட்புக் கூட்டம் நடத்தப்படும் என ஆணையர் ஷ்ரவண் குமார் ஜடாவத் அறிவித்தார். 
அதன்படி, கோவை மாநகராட்சியில் முதல் குறை கேட்புக் கூட்டம், மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநகராட்சி ஆணையர் ஷ்ரவண் குமார் ஜடாவத் தலைமை வகித்தார். 
துணை ஆணையர் பிரசன்ன ராமசாமி முன்னிலை வகித்தார். 
இந்தக் கூட்டத்தில் மனு அளிக்க வந்த  26ஆவது வார்டு பகுதிக்கு உள்பட்ட வெள்ளக்கிணறு அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த மகளிர், தங்கள் பகுதியில் தெருவிளக்குள் எரியவில்லை என்று கூறி கைகளில் மெழுகுவர்த்திகளை ஏந்தியபடி மனு கொடுக்க வந்திருந்தனர். அவர்களிடம் மனுவைப் பெற்றுக் கொண்ட ஆணையர் ஷ்ரவண் குமார் ஜடாவத்  உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். 
இதுகுறித்து அம்பேத்கர் காலனி மக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் கடந்த ஒரு மாதமாக தெருவிளக்குகள் எரிவதில்லை. மாநகராட்சி அதிகாரிகளிடம் இது தொடர்பாக பலமுறை புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதேபோல், எங்கள் பகுதியில் உள்ள பொதுக் கழிப்பிடம் பராமரிக்கப்படாமலும், தண்ணீர் வசதி இல்லாமலும் உள்ளது. அதற்கும் தீர்வு காண வேண்டும் என்றனர். 
இதேபோல், குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக மக்கள் மனுக்கள் அளித்தனர். பின்னர் மாநகராட்சி ஆணையர் ஷ்ரவண் குமார் ஜடாவத் செய்தியாளர்களிடம் கூறியது: 
2015-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடப்பு ஆண்டு ஜூலை மாதம் முதல்  மக்கள் குறைகேட்புக் கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் மீண்டும் நடைபெறத் தொடங்கி உள்ளது. முதல் கூட்டத்தில் கிழக்கு மண்டலத்தில் இருந்து 18 மனுக்களும், மேற்கு மண்டலத்தில் இருந்து 14 மனுக்களும், வடக்கு மண்டலத்தில் இருந்து 8 மனுக்களும், தெற்கு மண்டலத்தில் இருந்து 4 மனுக்களும், மத்திய மண்டலத்தில் இருந்து 6 மனுக்களும் பெறப்பட்டன. 
மேலும், மாநகரப் பொறியாளர் பிரிவில் 3 மனுக்கள், நகரமைப்புப் பிரிவுக்கு 6 மனுக்கள், கல்விப் பிரிவுக்கு 1 மனு,  மாமன்ற செயலர் பிரிவுக்கு 1மனு என மொத்தம் 61 மனுக்கள் மக்களிடம் இருந்து பெறப்பட்டன. இந்த மனுக்களின் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு உதவி ஆணையர்கள் மற்றும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார். 
கூட்டத்தில் மாநகரப் பொறியாளர் லட்சுமணன், செயற்பொறியாளர் ஞானவேல், மண்டல உதவி ஆணையர்கள் செந்தில்குமார் ரத்தினம், செந்தில் அரசன், செல்வம், ரவி, மகேஷ் கனகராஜ், நகர்நல அலுவலர் சந்தோஷ்குமார், மாநகரக் கல்வி அலுவலர் பழனி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT