கோயம்புத்தூர்

மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் மருத்துவர், செவிலியர் தாக்கப்பட்ட சம்பவம்: இருவர் கைது

4th Jul 2019 07:25 AM

ADVERTISEMENT

மருத்துவர், செவிலியர் தாக்கப்பட்டதைக் கண்டித்து மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனைக்கு வந்த புறநோயாளிகள் பாதிக்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய இருவரைப் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 மேட்டுப்பாளையம், குட்டையூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜன். இவரது மனைவி ருக்மணி (37). இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது லாரி மோதி செவ்வாய்க்கிழமை மாலை விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயம் அடைந்த இருவரும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கிருந்த மருத்துவர்கள் அவர்களை அன்னூர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது. 
அங்கு சென்றபோது, ருக்மணி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை முன்பு திரண்டு மருத்துவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், அங்கிருந்த மருத்துவர் லட்சுமணன் மற்றும் செவிலியர் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
 இதனால் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் செவ்வாய்க்கிழமை இரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கண்காணிப்பு கேமரா பதிவுகளை மேட்டுப்பாளையம் காவல்நிலையத்தில் தலைமை மருத்துவ அலுவலர் சேரலாதன் சமர்ப்பித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். 
 இந்நிலையில் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை வளாகத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும், மருத்துவர், செவிலியரைத் தாக்கியவரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கைகளில் கருப்பு பட்டை அணிந்து மருத்துவமனைக்கு வந்த அவர்கள் எந்தப் பணியிலும் ஈடுபடாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், புறநோயாளிகளுக்கு சீட்டு வழங்கும் அறையும் திறக்கப்படாததால் சிகிச்சைக்கு வந்த புறநோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாயினர். ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் நலச்சங்க மாநிலச் செயலர் ரவிசங்கர் தலைமை வகித்தார்.
 இந்நிலையில் தலைமை மருத்துவ அலுவலர் சேரலாதனின் புகாரின் அடிப்படையில், பெண்ணைத் தாக்கியது, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது, பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தியது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த மேட்டுப்பாளையம் போலீஸார், குட்டையூரைச் சேர்ந்த தங்கராஜ், மீரான் ஆகியோரைக் கைது செய்தனர். இதையடுத்து மருத்துவர்கள், செவிலியர்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பினர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT