கோயம்புத்தூர்

தண்ணீர் பிரச்னையில் திமுக இரட்டை வேடம் போடுகிறது: பாஜக மாநில பொதுச்செயலர்

4th Jul 2019 07:25 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னையில் திமுக இரட்டை வேடம் போடுகிறது என்று பாஜக மாநில பொதுச்செயலர் வானதி சீனிவாசன் கூறினார்.
 இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
 மாநில அரசின் அனுமதி இல்லாமல் எவ்விதத் திட்டங்களையும் தமிழகத்தில் மத்திய அரசு மேற்கொள்ளப்போவதில்லை. மக்களுக்கு விருப்பம் இல்லாத எந்த ஒரு திட்டத்தையும் முன்னெடுக்க மாட்டோம் என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளார். இந்நிலையில் இதை வைத்து அரசியல் செய்ய வேண்டிய தேவை இல்லை. குடிநீர் விவகாரத்திலும் இதே நிலை தான் தொடர்கிறது. தமிழக அரசு ஒத்துழைத்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள்ளாக கோதாவரி - காவேரி நதிகள் இணைப்பு சாத்தியமாகும். தண்ணீர் பற்றாக்குறை என்பது  திடீரென தோன்றியதல்ல. நீர் மேலாண்மையில் போதிய கவனம் செலுத்தாததே இதற்குக் காரணம்.
 ஆனால், தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சத்தை வைத்து திமுக அரசியல் செய்து வருகிறது. திமுகவின் ஆட்சிக் காலத்தில் எத்தனை நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு பராமரிக்கப்பட்டன என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை தர வேண்டும்.
 நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ளவர்களை காலி செய்யக்கூடாது என திமுகவினர் போராட்டம் நடத்துகின்றனர். அதே நேரத்தில் தண்ணீர் இல்லை என்றும் போராட்டம் நடத்துகின்றனர். இவ்வாறு இரட்டை வேஷம் போடுவதைத் திமுக தவிர்க்க வேண்டும்.
காங்கிரஸ் குடும்பக் கட்சி. ஆனால், தேசியக் கட்சி என்ற அந்தஸ்துக்குத் தகுதியான ஒரே கட்சி பாஜக மட்டும் தான். எனவே காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகியிருப்பது ஒன்றும் அதிர்ச்சிகரமான விஷயமல்ல.
 கோவையில் நடைபாதை வியாபாரிகள் ஆக்கிரமிப்புச் செய்துள்ளதாக கூறி மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வந்தது. ஆனால், காந்திபுரத்தில் இருந்த நடைபாதை கடைகள் மட்டுமே அகற்றப்பட்டன. மீதமுள்ள இடங்களில் இருந்த கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்றார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT