கோயம்புத்தூர்

சென்னை ரயில் 2 மணி நேரம் தாமதம்: பயணிகள் அவதி

4th Jul 2019 07:22 AM

ADVERTISEMENT

கோவை - சென்னை இன்டர்சிட்டி ரயில் புதன்கிழமை 2 மணி நேரம் தாமதாகப் புறப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். 
கோவையில் இருந்து சென்னைக்கு  தினமும் இன்டர்சிட்டி பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் காலை 6.15 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டுச் செல்லும் இந்த ரயில் பிற்பகல் 2.15க்கு சென்னையைச் சென்றடையும். சென்னையில் இருந்து 2.30 மணிக்கு புறப்பட்டு இரவு 10 மணிக்கு கோவையை வந்தடையும். 
இந்நிலையில், புதன்கிழமை காலை 6.15 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் இன்டர்சிட்டி ரயில் நீண்ட நேரமாகியும் பிளாட்பாரத்துக்கு வரவில்லை. இதுதொடர்பாக ரயில் நிலையத்தில் அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனால் 2-ஆவது பிளாட்பாரத்தில் காத்திருந்த பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். 
1 மணி நேரமாகியும் ரயில் பிளாட்பாரத்துக்கு வராததால் ஆவேசமடைந்த பயணிகள் ரயில்வே அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. வாரத்திற்கு ஒருமுறை இன்டர்சிட்டி ரயில் பராமரிப்புப் பணிக்காக பராமரிப்புக் கூடத்துக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம் என்றும், செவ்வாய்க்கிழமை இரவு பராமரிப்புப் பணிக்குச் சென்ற ரயில் பணிகள் முடியாததால் பிளாட்பாரத்துக்கு வருவதற்குத் தாமதமானதாக கூறி பயணிகளை அதிகாரிகள் சமாதானப்படுத்தினர். 
இதையடுத்து பராமரிப்புப் பணி முடிந்து காலை 7.50 மணிக்கு ரயில் 2-ஆவது பிளாட்பாரத்துக்கு வந்தது. அதன் பிறகு 8.10 மணிக்கு கோவையில் இருந்து சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றது. 2 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT