பொள்ளாச்சி அருகே விவசாயியை தாக்கிய ஐந்து பேரை போலீஸார் கைது செய்தனர்.
பொள்ளாச்சியை அடுத்த கோவிந்தனூரைச் சேர்ந்தவர் மயில்சாமி (46). விவசாயியான இவர், கோவிந்தனூர் பகுதியில் சாலையோரத்தில் ஞாயிற்றுக்கிழமை நின்று கொண்டிருந்தாராம். அப்போது அந்த வழியே அதிவேகத்தில் வந்த கார் அங்கு நின்றுகொண்டிருந்த சிலர் மீது மோதுவதுபோல சென்றது. இதைப்பார்த்த மயில்சாமி, மேலும் சிலர் காரில் சென்றவர்களை கண்டித்தனராம்.
இதையடுத்து, காரில் சென்றவர்கள் மயில்சாமி, அவருடன் இருந்த அருணாசலம் ஆகியோரை தாக்கியதுடன் காரை ஏற்றி கொன்றுவிடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மயில்சாமி வடக்கிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் மாப்பிள்ளைகவுண்டன்புதூரைச் சேர்ந்த ரியாஸ் (21), கோவிந்தனூரைச் சேர்ந்த சாகிப் (20), நாகூரைச் சேர்ந்த யாசின் (19), ராமபட்டினத்தைச் சேர்ந்த யாசிக் (21), கவியரசு(20) ஆகியோரை கைது செய்தனர்.