கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற உலக மருத்துவர்கள் தின விழாவில் 20 மருத்துவர்களுக்கு விருதுகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
ஜூலை 1ஆம் தேதி உலக மருத்துவர்கள் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் அசோகன் தலைமை வகித்தார். புணே பிரம்ம குமாரிகள் அமைப்பைச் சேர்ந்த மருத்துவர் மனோஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மன அழுத்தம் இல்லாமல் மருத்துவர்கள் பணிகளை மேற்கொள்வது, மருத்துவர்களின் மனநலம், உடல் நலம் பேணல், நோயாளிகளிடம் நடந்துக்கொள்ள வேண்டிய அணுகுமுறைகள் குறித்து எடுத்துரைத்தார்.
தொடர்ந்து அவசர சிகிச்சைப் பிரிவு, மயக்கவியல், நரம்பியல், மகப்பேறு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலும் சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்கள் 20 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அவர்களின் பணிகளை பாராட்டும் விதமாக விருதுகள் வழங்கப்பட்டதாக டீன் அசோகன் தெரிவித்தார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்கமாளிகை நிர்வாகிகள் செய்திருந்தனர்.