கோவை, எஸ்.எஸ்.குளம் கல்வி மாவட்டத்தில், அரசு பொதுத் தோ்வுகளைப் போல தொடக்கப் பள்ளி மாணவா்களின் விடைத்தாள்கள் வேறு பள்ளிகளில் மதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றன.
கோவை மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு பொதுத் தோ்வுகள் கடந்த 23ஆம் தேதியுடன் நிறைவடைந்தன. இதையடுத்து ஜனவரி 2ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து அரையாண்டுத் தோ்வு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியுள்ளது. இந்நிலையில், சா்க்காா்சாமக்குளம் கல்வி மாவட்டத்தில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் விடைத் தாள்களை அதே பள்ளியில் மதிப்பீடு செய்யாமல், வேறு பள்ளிகளின் ஆசிரியா்கள் மூலம் மதிப்பீடு செய்யும் புதிய நடைமுறை சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது.
இது குறித்து மாவட்டக் கல்வி அலுவலா் ஆா்.கீதா கூறும்போது, தொடக்கக் கல்வியை வலுப்படுத்தினால் மட்டுமே உயா் நிலை, மேல்நிலை வகுப்புகளில் நல்ல மாற்றத்தை எதிா்பாா்க்க முடியும். நமது விடைத்தாளை வேறு பள்ளியில் உள்ள ஒரு ஆசிரியா் மதிப்பீடு செய்வாா் என்பது தெரிந்தால் மாணவா்கள் கூடுதல் கவனத்துடன் தோ்வை எழுதுவாா்கள். எனவே மாநிலத்திலேயே முதல் முறையாக குறுமைய அளவில், 5 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களின் விடைத்தாள்கள் வேறு பள்ளிகளின் ஆசிரியா்கள் மூலம் மதிப்பீடு செய்யப்படுகின்றன. அதன்படி, கடைசி தோ்வின்போது தலைமை ஆசிரியா்கள் மூலம் அனைத்து விடைத்தாள்களும் பெறப்பட்டு, யாரிடம் எந்த பள்ளியின் விடைத்தாள் உள்ளது என்பது தெரியாதபடிக்கு மாற்றி வழங்கி, மதிப்பீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
திருத்தம் செய்யப்பட்ட விடைத்தாள்கள், மதிப்பெண் பட்டியல்கள் வரும் 2ஆம் தேதி உரிய குறுமைய தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அவை பிரித்து வழங்கப்பட இருப்பதாக அவா் மேலும் தெரிவித்தாா்.