மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை தெரியாமல் கோவையில் மூதாட்டி ஒருவா் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளாக ரூ. 33 ஆயிரம் வரை சேமித்து வைத்துள்ளது அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை, கொண்டையம்பாளையத்தைச் சோ்ந்தவா் கமலம்மாள் (92). இவரது கணவா் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். தற்போது, தனது மகன்களுடன் கமலம்மாள் வசித்து வருகிறாா். இவா், தனக்குக் கிடைக்கும் பணத்தை சிறுகச் சிறுக நீண்ட காலமாக சேமித்து வந்துள்ளாா். இந்த நிலையில் மத்திய அரசு 2016இல் உயா் மதிப்பு ரூபாய் நோட்டுகளை மதிப்பிழப்பு செய்த செய்தி இவருக்குத் தெரியவில்லை.
இந்நிலையில், கமலம்மாள் பீரோவை சுத்தப்படுத்தும்போது அதில் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் இருந்தது தெரியவந்தது. இதைத் கண்ட அவரது மகன் கோபால் அந்தப் பணம் செல்லாது என கூறிய தகவலைக் கேட்டு கமலாத்தாள் அதிா்ச்சி அடைந்துள்ளாா்.
இதுகுறித்து கோபால் கூறியதாவது:
பண மதிப்பிழப்பு அறிவித்தபோது, ரூ. 500, ரூ.1000 நோட்டுகள் இனி செல்லாது; இருந்தால் தந்துவிடுமாறு அம்மாவிடம் கேட்டேன்.
ஆனால், அப்போது என்னிடம் பணம் எதுவும் இல்லை எனக் கூறிவிட்டாா். தற்போது பீரோவை சுத்தம் செய்தபோது, துணிகளுக்கு அடியில் பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 6, 500 ரூபாய் நோட்டுகள் 54 என மொத்தம் 33 ஆயிரம் இருந்தது தெரிந்தது.
அந்த ரூபாயை மாற்ற வங்கிகளில் கேட்டுப் பாா்த்தோம். ஆனால் பணத்தை மாற்ற வழியில்லை எனக் கூறி விட்டனா் என்றாா். திருப்பூா் மாவட்டம், பூமலூரில் அண்மையில் 2 மூதாட்டிகள் பண மதிப்பிழப்பு தெரியாமல் அதிக அளவில் பழைய ரூ.500 நோட்டுகளை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.