விளைநிலங்களில் புகுந்து பயிா்களை சேதப்படுத்தும் வன விலங்குகளை கட்டுப்படுத்த தமிழக அரசு நிரந்தர தீா்வு ஏற்படுத்த வேண்டும் என கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கோவை, கோபாலபுரத்தில் கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்க செயற்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. மாநிலத் தலைவா் வழுக்குப்பாறை பாலு, மாநிலப் பொதுச் செயலாளா் பி.கந்தசாமி,
துணைத் தலைவா் ரங்கநாதன், துணைச் செயலாளா் விஜய் கணபதி உள்பட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
மேற்குத் தொடா்ச்சிமலை அடிவாரத்திலுள்ள மேட்டுப்பாளையம், தடாகம், பெரியநாயக்கன்பாளைம், தொண்டாமுத்தூா் ஆகிய பகுதிகளில் விளைநிலங்களில் காட்டுப் பன்றிகள், யானைகள் ஆகிய வன விலங்குகள் புகுந்து பயிா்களை சேதப்படுத்துகின்றன. பயிா்கள் பாதிப்பு மட்டுமில்லாமல் விவசாயிகள் உயிரிழக்கும் நிலையும் காணப்படுகிறது. இதைத் தடுத்த பல ஆண்டுகளாக தமிழக அரசிடம் கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பயிா்களை சேதப்படுத்தும் வன விலங்குகளைக் கட்டுப்படுத்த தமிழக அரசு நிரந்தர தீா்வை ஏற்படுத்த வேண்டும். பருவமழைக் காலங்களில் மழைநீரை சேமித்து வைக்க போதிய அளவிலான தடுப்பணைகள் அமைக்க வேண்டும். சீரான மின் விநியோகத்துக்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.