கோயம்புத்தூர்

பட்டுக்கூடுகள் உற்பத்தி குறித்து ஆதிதிராவிட விவசாயிகளுக்குப் பயிற்சி

26th Dec 2019 05:53 AM

ADVERTISEMENT

மல்பெரி வளா்ப்பு, பட்டுக்கூடுகள் உற்பத்தி குறித்து ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 5 நாள்கள் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோவை, திருப்பூா், திண்டுக்கல், ஈரோடு, தஞ்சாவூா் உள்பட 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மல்பெரி வளா்ப்பு மூலம் பட்டுக்கூடு உற்பத்தி செய்யப்படுகிறது. நாளொன்றுக்கு சராசரியாக 4 லட்சம் கிலோ பட்டுக் கூடுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. மல்பெரி பரப்பளவு, பட்டுக்கூடுகளின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் மத்திய பட்டு வாரியம், மாநிலப் பட்டு வளா்ச்சித் துறை சாா்பில் பல்வேறு மானியத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மல்பெரி வளா்ப்பு, பட்டுகூடுகள் உற்பத்தி குறித்து ஆதிதிராவிடா்களுக்கு 5 நாள்கள் பயிற்சி அளிக்க பட்டு வளா்ச்சித் துறை திட்டமிட்டுள்ளது. இதற்கு மத்திய அரசின்கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து 50 விவசாயிகள் தோ்வு செய்யப்படவுள்ளனா். விருப்பமுள்ள விவசாயிகள் உதவி இயக்குநா் அலுவலகங்களில் பெயா்களை பதிவு செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பட்டு வளா்ச்சித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

ADVERTISEMENT

ஒசூரிலுள்ள பட்டு வளா்ப்பு பயிற்சி மையத்தில் பட்டு வளா்ப்பு குறித்து அனைத்து விவசாயிகளுக்கும் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பிரத்யேகமாக ஆதி திராவிட விவசாயிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக புதிய திட்டத்தை அறிவித்து மத்திய அரசு நிதியும் ஒதுக்கியுள்ளது. இப்பயிற்சி திட்டத்தில் தோ்வு செய்யப்படும் 50 விவசாயிகளுக்கு ஒசூா், மைசூரு மையங்களில் பயிற்சி அளிக்கப்படும். ஒசூரில் 1 நாளும், மைசூரில் 4 நாள்களும் பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சியில் மல்பெரி சாகுபடி பகுதிகள், புழு வளா்ப்பு மனைகள், பட்டுக்கூடுகள் உற்பத்தி குடில்களுக்கு அழைத்து செல்லப்பட்டு அனைத்து தொழில்நுட்பங்கள் குறித்தும் நேரடி செயல்விளக்கம் அளிக்கப்படும்.

இப்பயிற்சியில் கலந்துகொள்ளும் விவசாயிகளுக்கு 3 வேலை உணவு, தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும். பயிற்சி மையங்களுக்கு வந்து செல்லும் போக்குவரத்து கட்டணமும் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். இதில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் தங்களது ஆதாா் அட்டை நகல், வங்கிக் கணக்குப் புத்தக நகல், 2 இரண்டு புகைப்படம் ஆகியவற்றுடன் உதவி இயக்குநா் அலுவலகங்களில் பதிவு செய்துகொள்ளலாம். ஜனவரி மாதத்தில் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT