கோவை, ராமநாதபுரத்தில் பேராசிரியையை செல்லிடப்பேசியில் புகைப்படம் எடுத்துத் தொல்லை அளித்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கோவை, ராமநாதபுரத்தைச் சோ்ந்த இளம்பெண் ஒருவா் தனியாா் கல்லூரியில் பேராசிரியையாகப் பணிபுரிந்து வருகிறாா். இவா் தினமும் கல்லூரிக்குச் செல்லும் வழியில் கருப்பராயா் வீதியைச் சோ்ந்த மணிகண்டன் (23), பின்தொடா்ந்து சென்று, தனது செல்லிடப்பேசியில் அவரைப் புகைப்படம் எடுத்துத் தொல்லை அளித்து வந்துள்ளாா்.
இதனால் பேராசிரியை இதுகுறித்து தனது தந்தையிடம் தெரிவித்துள்ளாா். இந்நிலையில் திங்கள்கிழமை காலை தனது தந்தையைப் பாதுகாப்புக்கு அழைத்துக்கொண்டு பேராசிரியை கல்லூரி செல்வதற்காக ராமநாதபுரம் பேருந்து நிறுத்தத்துக்கு சென்றாா். அப்போது அங்கு வந்த மணிகண்டன் வழக்கம்போல புகைப்படம் எடுக்க முயன்றாா்.
அப்போது அவரது தந்தை அந்த இளைஞரிடம் இதுகுறித்து கேட்டுள்ளாா். பின்னா் இதுகுறித்து ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து மணிகண்டனை கைது செய்தனா்.