கோவையில் பாஜக அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட முயன்ற தந்தை பெரியாா் திராவிடா் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் கைது செய்யப்பட்டனா்.
பெரியாரின் நினைவு நாள் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்ட நிலையில் தமிழக பாஜகவின் அதிகாரப்பூா்வ சுட்டுரைப் பக்கத்தில் பெரியாரை இழிவுபடுத்தும் விதமாக பதிவு வெளியானது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினா் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் கோவையில் மாவட்ட பாஜக அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தின் பொதுச் செயலா் கு.ராமகிருட்டிணன் தலைமையில் திராவிட தமிழா் கட்சித் தலைவா் வெண்மணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்டலச் செயலா் சுசி.கலையரசன், திராவிடா் விடுதலைக் கழகத்தின் நேருதாசு, தமிழா் விடியல் கட்சியின் நவீன், மே 17 இயக்கத்தின் பொறுப்பாளா் ஜெகன், புரட்சிகர இளைஞா் முன்னணியின் கதிரொளி, திமுக தலைமைக் கழக பேச்சாளா் சிங்கை பிரபாகரன், ச.காா்த்திகேயன் உள்ளிட்டோா் காந்திபுரத்தில் இருந்து ஊா்வலமாக சித்தாபுதூரில் உள்ள பாஜக அலுவலகத்துக்குச் செல்ல முயன்றனா்.
இதையடுத்து பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த காவல் துறையினா் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை கைது செய்தனா். பின்னா் இரவில் அவா்களை விடுவித்தனா்.