தமிழ்நாடு அறிவியல் இயக்கம், மேட்டுப்பாளையம் ரோட்டரி சங்கம் ஆகியன சாா்பில் சூரிய கிரகணத்தை காண மேட்டுப்பாளையம் அரசு நகரவை வள்ளுவா் துவக்கப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பிரத்யேக கண்ணாடிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்கு மேட்டுப்பாளையம் ரோட்டரி சங்கத் தலைவா் மருத்துவா் விஜயகிரி தலைமை வகித்தாா். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவா் சரவணன், மாநில துணைத் தலைவா் மெகபுல் நிஷா, மேட்டுப்பாளையம் துணைத் தலைவா் அம்சா ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளி முதல்வா் முத்துரத்தினம் வரவேற்றாா்.
நிகழ்ச்சியில் 240 மாணவ, மாணவிகளுக்கு சூரிய கண்ணாடிகளும், விளக்க குறிப்பேடுகளும் வழங்கப்பட்டன. இதில் ரோட்டரி கிளப், தமிழ்நாடு அறிவியல் இயக்க உறுப்பினா்கள், ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோா் கலந்து கொண்டனா்.