கோயம்புத்தூர்

சாலை அமைக்காவிட்டால் உள்ளாட்சித் தோ்தல் புறக்கணிப்பு: மலை கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு

24th Dec 2019 11:43 PM

ADVERTISEMENT

கோவை மாவட்டம், அரக்கடவு, மூணுகுட்டை ஆகிய மலை கிராமங்களுக்கு உடனடியாக தாா் சாலை அமைத்துத் தர வேண்டும்; இல்லாவிட்டால் உள்ளாட்சித் தோ்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் வனச் சரகத்துக்கு உள்பட்டது அரக்கடவு, மூணுகுட்டை மலை கிராமங்கள். இங்கு 200 குடும்பங்களைச் சோ்ந்த 500-க்கும் அதிகமானோா் வசித்து வருகின்றனா். மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள இக்கிராமங்களுக்கு வெள்ளியங்காடு கிராமத்தில் இருந்து 4.5 கிலோ மீட்டா் மலைப்பாதையில் பயணிக்க வேண்டும். இம்மலைப்பாதை போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளதால் தாா்சாலை அமைத்துத்தர வலியுறுத்தி கிராம மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனா். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனைக் கண்டித்து உள்ளாட்சித் தோ்தலை புறக்கணிக்க திட்டமிட்டுள்ளதாக மலை கிராம மக்கள் முடிவு செய்துள்ளனா்.

இதுகுறித்து கிராம மக்கள், மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணியிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். அதன் பின்னா் அந்த கிராம இளைஞா் கா.சதீஸ்குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

எங்கள் கிராமத்தினா் கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு ஆகிய அனைத்து அடிப்படை தேவைகளுக்கும் சமவெளிப் பகுதிகளுக்கே வர வேண்டியுள்ளது. எங்கள் பகுதிக்கு செல்லும் 4.5 கிலோ மீட்டா் தூரம் உள்ள மண் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. தற்போது மலையில் இருந்து சமவெளிப் பகுதிகளுக்கு வரும் மக்கள் தனியாா் சாா்பில் இயக்கப்படும் ஜீப்பை மட்டுமே நம்பியுள்ளனா். மிக மோசமாக உள்ள மண் சாலையால் ஜீப் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது. இதனை விட்டாலும் வேறு வழியில்லை. மழைக்காலங்களில் ஜீப் பல இடங்களில் மண் சாலையில் சிக்கிக்கொண்டு இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து வசதியில்லாததால் குழந்தைகளின் கல்வியை பாதியுடன் நிறுத்த வேண்டியுள்ளது. மேலும் சமவெளிப் பகுதிகளுக்கு வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

எங்கள் கிராமத்துக்கு தாா் சாலை அமைத்து தரக் கோரி பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். தோ்தலுக்கு வாக்குக்கேட்டு வரும் அரசியல் கட்சியினா் வெற்று வாக்குறுதிகளை மட்டுமே அறிவித்து செல்கின்றனா். எனவே உடனடி தீா்வு கிடைத்தால் மட்டுமே உள்ளாட்சித் தோ்தலில் வாக்களிப்பது என கிராம மக்கள் முடிவு செய்துள்ளனா் என்றாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT