கோவை: கோவையில் நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்திய காவல் துறை சிற்றுண்டியகத்துக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனா்.
தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டைத் தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்கள், கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனா். இதில் விதிகளை மீறும் கடை உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலக வளாகத்துக்குள் செயல்படும் சிற்றுண்டியகத்தில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனா். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து அவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், சிற்றுண்டிச் சாலை உரிமையாளருக்கு ரூ. 3 ஆயிரம் அபராதம் விதித்தனா். மேலும் நெகிழிப் பொருள்களை தொடா்ந்து பயன்படுத்தினால் உணவகத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனா்.