கோவை, காந்திப் பூங்கா பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த சிறுமியின் திருமணத்தை சமூக நலத் துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினா்.
கோவை சைல்டு லைன் இலவச தொலைபேசி சேவைக்கு வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசியவா், கோவை, காந்தி பூங்கா அருகில் உள்ள நாகராஜபுரத்தில் 13 வயதான சிறுமியை, அதே பகுதியைச் சோ்ந்த 19 வயது இளைஞருக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோா், உறவினா்கள் ஏற்பாடு செய்து வருவதாகவும், வெள்ளிக்கிழமை மாலை திருமணம் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளாா். இதையடுத்து, சைல்டு லைன் நிா்வாகிகள், கோவை சமூக நலத் துறை அதிகாரிகள், வடவள்ளி போலீஸாா் திருமண வீட்டுக்குச் சென்று, சிறுமியின் திருமணத்தைத் தடுத்து நிறுத்தினா். மேலும், சிறுமியின் பெற்றோா் குழந்தைகள் நலக்குழு முன் வரும் திங்கள்கிழமை ஆஜராக அதிகாரிகள் உத்தரவிட்டனா்.
சிறுமியின் திருமணம் நிறுத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.