கோயம்புத்தூர்

சிறையில் இருந்து வெளிவந்த மறுநாளே கொலை முயற்சியில்  ஈடுபட்ட இரட்டையர்கள் மீண்டும் சிறையில் அடைப்பு

29th Aug 2019 07:11 AM

ADVERTISEMENT

சிறையில் இருந்து வெளிவந்த மறுநாளே கொலை முயற்சியில் ஈடுபட்ட கோவையைச் சேர்ந்த இரட்டைச் சகோதரர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவை, செல்வபுரத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன்கள் சுரேஷ் (23), ரமேஷ் (23). இரட்டையர்களான இவர்கள் மீது கோவையில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு, கொலை முயற்சி, அடிதடி உள்பட 16 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்ட இவர்கள் ஆகஸ்ட் 17ஆம் தேதி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 
இந்நிலையில் இனி திருந்தி வாழ உள்ளோம் என இவர்கள் உறுதி அளித்ததன் அடிப்படையில் நன்னடத்தை விதியின் கீழ் இருவரும் விடுவிக்கப்பட்டனர். சிறையை விட்டு வெளியே வந்த இருவரும் ஏற்கெனவே இருந்த முன்பகை காரணமாக செல்வபுரத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமாரைக் கத்தியால் குத்தினர். இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 இந்தச் சம்பவம் தொடர்பாக கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்த செல்வபுரம் போலீஸார், இருவரையும் கைது செய்தனர். பின் இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் இருவரும் காவல் துணை ஆணையரும் (சட்டம்  ஒழுங்கு), நிர்வாக நடுவருமான பாலாஜி சரவணன் முன்னிலையில் புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். 
சம்பவம் குறித்து செல்வபுரம் காவல் ஆய்வாளரிடமும், கைது செய்யப்பட்ட சுரேஷ், ரமேஷ் இருவரிடமும் துணை ஆணையர் பாலாஜி சரவணன் விசாரித்தார். 
இதையடுத்து நன்னடத்தை விதிகளை மீறிய குற்றத்துக்காக இருவரையும் 355 நாள்கள் சிறையில் அடைக்க அவர் உத்தரவிட்டார். இதையடுத்து இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT