கோவை மாவட்டம், சூலூர் அருகே இருசக்கர வாகனத்தில் வந்தவர் லாரி மோதியதில் காயமடைந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (24), டூவீலர் மெக்கானிக். சூலூரை அடுத்த காங்கேயம்பாளையத்தில் வசித்து வந்த இவர், திங்கள்கிழமை நள்ளிரவு சூலூர்- திருச்சி சாலையில் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே தனது மோட்டார் சைக்கிளில் திருப்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வேகமாக வந்த லாரி, மணிகண்டன் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் தலை, கை, கால் பகுதிகளில் மணிகண்டன் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடினார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன், செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த சூலூர் போலீஸார் லாரியை வேகமாக ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாகமுத்து (42) என்பவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.