ஆனைகட்டி அருகே பெண் யானை இறந்துகிடந்தது குறித்து வனத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
கோவை மாவட்டம், ஆனைகட்டி அருகே தோட்டக் கலைத் துறை அலுவலகம் அமைந்துள்ளது. இதன் அருகே பழங்குடியின கிராமங்கள் உள்ளன. தோட்டக் கலைத் துறை அருகில் உள்ள வனத்தில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து அப்பகுதியினர் சென்று பார்த்தபோது சுமார் 10 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று இறந்த நிலையில் கிடந்துள்ளது.
இதுகுறித்து வனத் துறையினருக்கு அப்பகுதியினர் தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினர் யானையின் சடலத்தைப் பார்வையிட்டனர். இதுகுறித்து வனத் துறை அதிகாரிகள் கூறுகையில், யானையின் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அது இறந்து நான்கு அல்லது ஐந்து நாள்கள் ஆகியிருக்கலாம் எனத் தெரிகிறது. யானையின் இறப்புக்கு என்ன காரணம் என்பதைக் கண்டறியும் நோக்கில் வியாழக்கிழமையன்று பிரேதப் பரிசோதனை நடத்தப்பட உள்ளது என்றனர்.