கேரள மாநிலம், வயநாட்டில் வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி புதன்கிழமை வந்தடைந்தார். இதற்காக புதுதில்லியில் இருந்து 3 குண்டு துளைக்காத கார்கள் ரயில் மூலம் செவ்வாய்க்கிழமை கோவை கொண்டுவரப்பட்டு கேரள போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கடந்த மக்களவைத் தேர்தலில் கேரள மாநிலம், வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அண்மையில் கேரளத்தில் கனமழையால் பெரும் வெள்ளச்சேதம் ஏற்பட்டபோது, ராகுல்காந்தி வயநாடு தொகுதியில் சேதங்களைப் பார்வையிட்டு, மக்களுக்கு ஆறுதல் கூறினார்.
இந்நிலையில் வயநாடு, மலப்புரம் பகுதிகளில் ராகுல்காந்தி புதன்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்க உள்ளதாகக் கூறப்படுகிறது. ராகுல்காந்தியின் கேரளம் வருகையையொட்டி சிறப்பு பாதுகாப்புக் குழுவினர் புதுதில்லியில் இருந்து ரயில் மூலம் செவ்வாய்க்கிழமை கோவை வந்தனர். பின்னர் அவர்கள் வயநாடு புறப்பட்டுச் சென்றனர்.
அவர்களுடன் ரயிலில் கொண்டுவரப்பட்ட 3 குண்டு துளைக்காத கார்கள், கோவை போலீஸார் மூலம் வாளையாறில் கேரள போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.