சேலத்தில் இருந்து கோவை வந்த பேருந்தில் நகைப் பட்டறை ஊழியரிடம் 116 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
கோவை, உக்கடம், பிரபு நகரைச் சேர்ந்தவர் அபினய் (41). இவர் கோவை, ராஜ வீதியில் சொந்தமாக நகைப் பட்டறை வைத்துள்ளார். இங்கு தயாரிக்கப்படும் நகைகளை, பிற மாநிலம், மாவட்டங்களில் உள்ள நகைக் கடைகளுக்கு ஊழியர்கள் மூலமாக விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் தன்னிடம் வேலை செய்து வரும் ரவிசந்திரன் என்பவரிடம் நகைகளைக் கொடுத்து, சேலத்தில் உள்ள சில நகைக் கடைகளுக்கு வழங்குமாறு கூறி திங்கள்கிழமை அனுப்பி வைத்தார். சேலம் சென்ற ரவிசந்திரன், அங்குள்ள கடைகளுக்கு விற்றது போக மீதமிருந்த 116 பவுன் நகைகளுடன் சேலத்தில் இருந்து கோவைக்கு பேருந்தில் வந்தார். பீளமேடு அருகே பேருந்து வந்தபோது பையில் இருந்த நகைகளைக் காணவில்லை. அவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.25 லட்சம் ஆகும். இதுகுறித்து ரவிசந்திரன் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.