கோயம்புத்தூர்

கோவை மாநகரில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த கூடுதல் போலீஸார் நியமனம்

28th Aug 2019 10:05 AM

ADVERTISEMENT

கோவை மாநகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் காரணமாக போக்குவரத்தை ஒழுங்குபடுத்த கூடுதலாக போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர். 
கோவை மாநகரில் டவுன்ஹால், உக்கடம், காந்திபுரம், சிங்காநல்லூர், அவிநாசி சாலை, திருச்சி சாலை, பொள்ளாச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலைப் பகுதிகளில் நாளுக்கு நாள் வாகனப் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் நகரின் முக்கியச் சாலைகளில் வாகனங்கள் தேங்கி, போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தவிர்க்க முடியாததாக உள்ளது.
 இந்நிலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கூடுதல் போலீஸாரைக் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என தன்னார்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் 20 பெண் போலீஸார், நில அபகரிப்புப் பிரிவில் பணியாற்றும் 7 காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட போலீஸார், நகரில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
 இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "நகரின் பிரதானச் சாலைகளில் சில இடங்களில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அப்பகுதிகளிலும், மாற்றுப் பாதைகளிலும் வாகன நெரிசல் அதிகரித்து உள்ளது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்த ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள போலீஸாருடன், தற்போது கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ள போலீஸாரும் இணைந்து, அதிகப் போக்குவரத்து நெரிசல் உள்ள சாலைகளில் காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை ஷிப்ட் முறையில் பணியாற்ற உள்ளனர். பண்டிகை மற்றும் விஷேச நாள்களில் மாநகரில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த மேலும் கூடுதலாகப் போலீஸார் நியமிக்கப்படுவார்கள்' என்றார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT