கோவையில் கங்கா பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மையம் சார்பில் மகப்பேறு சிகிச்சைகள் குறித்த 3 நாள் சர்வதேச கருத்தரங்கம் வரும் 30ஆம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கங்கா பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மைய மருத்துவர் சுமா நடராஜன் கூறியதாவது:
கோவையில் கங்கா பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மையத்தின் சார்பில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகப்பேறு சிகிச்சைகள் தொடர்பான சர்வதேச கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற, சிறந்து விளங்கும் மருத்துவர்கள் கலந்துகொண்டு ஆலோசனை வழங்குகின்றனர். அதன்படி 5 ஆவது சர்வதேச கருத்தரங்கம் சாய்பாபா காலனி கங்கா மருத்துவமனையில் வரும் 30 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 1ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெற உள்ளது.
இதில் கர்ப்பம் தரிப்பதில் உள்ள சிக்கல்கள், அதற்கான தீர்வுகள், கர்ப்பகாலத்தில் கர்ப்பிணிகள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு முறைகள், கடைப்பிடிக்க வேண்டிய பழக்க வழக்கங்கள், ஊட்டச்சத்துப் பிரச்னைகள், குழந்தைப் பிறந்த பின் கவனிக்க வேண்டிய விஷயங்கள், குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது.
மேலும் பிரசவத்தின் போது ஏற்படும் உயிரிழப்பு, அதற்கான காரணங்கள், தவிர்க்க வேண்டிய நடைமுறைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்படும்.
இக்கருத்தரங்கில் பல்வேறு நாடுகளில் இருந்து 500-க்கும் அதிகமான மருத்துவர்கள் பங்கேற்க உள்ளனர் என்றார்.