கோயம்புத்தூர்

அனுமதியின்றி நடைப்பயணம்: மதிமுகவினர் கைது

28th Aug 2019 10:01 AM

ADVERTISEMENT

கோவை, மதுக்கரை, குரும்பபாளையம் அருகே உள்ள மஞ்சிப்பள்ளம் ஆற்றில் சேதமடைந்த தடுப்பணைகளை சீரமைக்க வலியுறுத்தி அனுமதியின்றி நடைப்பயணம் செல்ல முயன்ற மதிமுகவினரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
 குரும்பபாளையம் பகுதியில் மஞ்சிப்பள்ளம் ஆற்றில் சேமடைந்துள்ள தடுப்பணைகளை சீரமைக்க வலியுறுத்தி மதிமுகவினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அக்கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாளர் வே.ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் குகன் மில் செந்தில்குமார், அவைத் தலைவர் மாணிக்கவாசகம் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.  சேதமடைந்த தடுப்பணைகளை உடனடியாகச் சரி செய்ய வேண்டும், கூடுதலாக தடுப்பணைகள் கட்டி மஞ்சிப்பள்ளம் ஆற்றின் நீரை சேமிக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியபடி, 
கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கோவை பொதுப் பணித் துறை அலுவலகத்தை நோக்கி மதிமுகவினர் 30 பேர் அனுமதியின்றி நடைப்பயணம் செல்ல முயன்றனர். இதையடுத்து அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
 முன்னதாக இது தொடர்பாக வே.ஈஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் மஞ்சிப்பள்ளம் ஆற்றின் குறுக்கே இருந்த மூன்று தடுப்பணைகள் உடைந்துவிட்டன. அதை சரி செய்ய வலியுறுத்தி கடந்த ஆண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். ஆனால் மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தடுப்பணை கட்டியிருந்தால் அண்மையில் பெய்த மழை நீரை சேமித்திருக்கலாம். தமிழக அரசின் மெத்தனத்தின் காரணமாக மஞ்சிப்பள்ளம் ஆற்றில் வந்த தண்ணீர் முழுவதுமாக கேரளத்துக்கு சென்றுவிட்டது. இனியாவது இந்த ஆற்றில் தடுப்பணைகள் கட்டி நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT