பொருளாதார மந்த நிலை, பஞ்சு விலை உயர்வு, ஏற்றுமதியில் சுணக்கம் போன்றவற்றால் ஜவுளித் துறைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க தமிழக அரசு உதவ வேண்டும் என ஜவுளித் தொழில் அமைப்பான டெக்ஸ்பிரனர்ஸ் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அந்த கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பியுள்ள மனு:
தமிழகத்தில் அதிக அளவு வேலைவாய்ப்பை வழங்கும் துறையாக ஜவுளித் துறை உள்ளது. தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் இருந்து மட்டும் ஆண்டுக்கு சுமார் ரூ.40 ஆயிரம் கோடிக்கு ஜவுளிப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு அந்நிய செலாவணி ஈட்டப்படுகிறது. தமிழக ஜவுளி நிறுவனங்களைப் பார்த்து பிற மாநிலங்கள் தங்களின் ஜவுளி உற்பத்தித் துறை கட்டமைப்பை ஏற்படுத்தும் அளவுக்கு தமிழகம் இந்தத் துறையில் வளர்ச்சி அடைந்துள்ளது. சர்வதேச அளவிலும் உள்நாட்டிலும் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலை, பஞ்சு விலை உயர்வு, ஏற்றுமதியில் சுணக்கம், விற்பனை செய்யப்படும் ஜவுளிப் பொருள்களுக்கு பணம் திரும்ப வருவதில் ஏற்பட்டுள்ள தாமதம், மற்ற மாநில ஆலைகளுடன் ஏற்பட்டுள்ள கடும் போட்டி என பல்வேறு நெருக்கடிகளை தமிழக நூற்பாலைகளும், ஜவுளி உற்பத்தித் துறையும் கடந்த 6 மாதங்களாக சந்தித்து வருகின்றன.
சலுகை வழங்க வேண்டும்: பொருள் தரமானதாகவும், விலை குறைவாகவும் இருந்தால்தான் வியாபாரம் நடைபெறும் என்பதால், இந்த நெருக்கடியிலும் உற்பத்திச் செலவைக் குறைத்து போட்டித் திறனை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தத் துறை உள்ளது. எனவே, இதற்காக உதவும் வகையில் தமிழக அரசு சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதன்படி, நூற்பாலைகளின் உற்பத்தி செலவில் மூலப் பொருளுக்கு அடுத்து கணிசமான தொகை மின்சாரத்துக்கு செலவிடப்படுகிறது. தற்போதைய நெருக்கடி நிலையைக் கருத்தில் கொண்டு குஜராத், மகாராஷ்டிரம், பஞ்சாப் மாநிலங்கள் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு மின் கட்டணத்தில் சில ஆண்டுகளுக்கு சலுகை வழங்கியுள்ளன. அதைப் போலவே தமிழக நூற்பாலைகளுக்கும் யூனிட்டுக்கு ரூ.1.50 வரை சலுகை வழங்க வேண்டும்.
மின்சார எக்சேஞ்களில் தமிழக தொழிற்சாலைகள் மின்சாரம் வழங்கும்போது, கிராஸ் சப்சிடி சர்சார்ஜ், ஒரு யூனிட்டுக்கு ரூ.1.67 ஆக இருப்பதை ரூ.1 ஆக குறைக்க வேண்டும். தமிழக ஜவுளித் துறை, ஆண்டுதோறும் 1 கோடி பேலுக்கும் அதிகமான பஞ்சை வேறு மாநிலங்களில் வாங்குகிறது. பஞ்சு வர்த்தகம் உலகமயமாக்கப்பட்டதால் குறுகிய காலத்தில் ஏற்படும் விலை மாற்றங்கள் நூல் விலையிலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இந்நிலையில், மற்ற மாநிலங்களில் பஞ்சு அரவை செய்யும் ஜின்னிங் ஆலைகள் தமிழகத்தில் பஞ்சை இருப்பில் வைத்து விற்பனை செய்யத் தயாராக உள்ளன. இதனால் நமது தேவைக்கு ஏற்ப பஞ்சை உள்ளூரிலேயே வாங்கிக் கொள்ள முடியும். ஆனால் தமிழகத்துக்குள் விற்பனை செய்யப்படும் பஞ்சுக்கு ஜி.எஸ்.டி. இல்லாமல் ஒரு சதவீத செஸ் வரி விதிக்கப்படுகிறது. இந்த வரியை நீக்குவதால் தமிழக ஜவுளித் துறையில் பெரிய மாற்றங்களை நிகழ்த்த முடியும்.
தனி ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமிக்க வேண்டும்: அமெரிக்க - சீன வர்த்தகப் போரால் திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏற்றுமதியாகும் ஜவுளிப் பொருள்களின் மதிப்பு இரட்டிப்பாக உள்ளது. எனவே, இந்த பகுதியில் ஏற்றுமதி வளர்ச்சி தொடர்பான விவகாரங்களை கவனிப்பதற்காக தனி ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமிக்க வேண்டும்.
எங்களது அமைப்பு சார்பில் 753 ஜவுளி உற்பத்தி நிறுவனங்களின் நிதி நிலையை ஒவ்வொரு நிறுவனத்தின் "கிரெடிட் ரேட்டிங்' வாரியாக ஆய்வு செய்தோம். அதில் சுமார் 43 நிறுவனங்கள் சிறிது முயன்றால் சிக்கலில் இருந்து விடுபட்டு மீண்டும் நன்றாகச் செயல்பட முடியும் என்பது
தெரிய வந்துள்ளது. அதுபோன்ற நிறுவனங்களைத் தேர்வு செய்து குறிப்பிட்ட காலத்துக்கு வட்டி சலுகை, மின்சார சலுகை போன்றவற்றை வழங்கலாம்.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்றினால் தமிழக ஜவுளி நூற்பாலைகள் தற்போதைய சிரமமான சூழலைக் கடந்து செயல்பட முடியும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.