கோயம்புத்தூர்

நிறுவனச் செயலர் தேர்வு: கோவை மாணவர் முதலிடம்

27th Aug 2019 09:24 AM

ADVERTISEMENT

தேசிய அளவில் நடைபெற்ற நிறுவனச் செயலர் (கம்பெனி செக்ரெட்டரிஷிப்) தேர்வில் கோவையைச் சேர்ந்த மாணவர் முதலிடம் பிடித்துள்ளார்.
இது குறித்து கோவை கம்பெனிச் செயலர் நிறுவனத்தின் உதவி இயக்குநர் பி.ஸ்ரீஜித் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
 நிறுவனச் செயலர் படிப்புக்காக நிர்வாகப் பாடம், தொழில்முறை பாடங்களுக்கு ஆண்டுதோறும் ஜூன், டிசம்பர் மாதங்களில் தேர்வுகள் நடத்தப்படும். இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற தேர்வுகளின் முடிவுகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 25) வெளியிடப்பட்டன. 
நிர்வாகப் பாடம், தொழில்முறை பாடங்களுக்கு புதிய பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோதிலும், பழைய - புதிய பாடங்களுக்கு தனித்தனியாக தேர்வுகள் நடத்தப்பட்டன. புதிய பாடத் திட்டத்தின் அடிப்படையில் நிர்வாகப் பாடத்துக்கு தேர்வு எழுதிய கோவை, குறிச்சி ஹவுஸிங் யூனிட் பகுதியைச் சேர்ந்த மாணவர் ஆர்.கோகுல் தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
அதேபோல பழைய பாடத் திட்டத்தின் அடிப்படையில் தேர்வு எழுதிய கோவை, ஆர்.எஸ்.புரம், மேற்கு பெரியசாமி சாலையைச் சேர்ந்த ஜி.ஆருத்ரா தேசிய அளவில் 8-ஆவது இடம் பிடித்துள்ளார்.
நிறுவனச் செயலர் படிப்புக்கான அடுத்த தேர்வு வரும் டிசம்பர் 20-ஆம் தேதி தொடங்கி 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 25-ஆம் தேதி கடைசி நாள் என அதில் 
குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT