கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூரில் சமையல் எண்ணெய் தயாரிப்பு ஆலையில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை நடத்திய சோதனையில் 1,500 லிட்டர் கலப்பட எண்ணெயைப் பறிமுதல் செய்தனர்.
அன்னூர் - ஓதிமலை சாலை, கரியாக்கவுண்டனூரில் தனியார் தோட்டத்தில் கலப்பட சமையல் எண்ணெய் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சியருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து ஆட்சியரின் உத்தரவின் பேரில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் கே.தமிழ்செல்வன் தலைமையிலான அலுவலர்கள் சொலல்வல்லன், ஆறுசாமி ஆகியோர் அந்தப் பண்ணைத் தோட்டத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அங்கு சமையலுக்குப் பயன்படுத்தும் கடலை எண்ணெயுடன் தரம் குறைந்த பாமாயில் எண்ணெயைக் கலந்து தகர கேன்களில் அடைத்து முகவரி லேபிள் இல்லாமல் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து கலப்பட எண்ணெய்த் தயாரிப்பில் ஈடுபட்ட பொன்னுசாமி (62), அவரது மகன் அசோக் உள்ளிட்டோரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதில், கடந்த நான்கு ஆண்டுகளாக கலப்பட எண்ணெய் தயாரித்து அன்னூர், புளியம்பட்டி, சிறுமுகை, சத்தியமங்கலம் உள்ளிட்ட
பகுதிகளில் விற்பனை செய்தது தெரியவந்தது.
மேலும் சமையலுக்குப் பயன்படுத்தும் மசாலா பொடிகளையும் இதேபோல தயாரித்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 1,500 லிட்டர் கலப்பட எண்ணெய், மசாலா பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அந்த ஆலைக்கு "சீல்' வைத்தனர்.