கோயம்புத்தூர்

33 வழக்குகளில் தொடர்புடைய ரௌடி கைது: தப்ப முயன்றபோது தவறி விழுந்ததில் கால் முறிவு

23rd Aug 2019 09:18 AM

ADVERTISEMENT

கோவையில் 33 குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரௌடியை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். தப்பியோட முயன்றுபோது ரௌடியின் இடது கால் உடைந்து காயம் ஏற்பட்டது.
கோவை, புலியகுளம் ஏரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் ஜோஸ் என்ற ஜோஷ்வா(30). இவர் மீது மூன்று கொலை வழக்குகள், வழிப்பறி, அடிதடி உள்பட 32 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஜோஷ்வா கடந்த சில நாள்களுக்கு முன்பு 16 வயது சிறுமியைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தாராம். இதுகுறித்து ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீஸாரிடம் சிறுமியின் பெற்றோர் புகார் தெரிவித்தனர். இதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் தலைமறைவாக இருந்த ஜோஷ்வாவைத் தேடி வந்தனர்.
இந்நிலையில் அவர் சுங்கம் பகுதியில் தலைமறைவாக இருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். போலீஸார் வருவது குறித்து தகவலறிந்த ஜோஷ்வா அங்கிருந்து தப்பியோட முயன்றார். 
அப்போது தவறி விழுந்ததில் அவரது இடது கால் முறிந்தது. இதையடுத்து போலீஸார் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்ததனர். இந்நிலையில் அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் விடுத்துள்ள அறிக்கையில், ஜோஸ்வா மீது கோவை ராமநாதபுரம், சிங்காநல்லூர் காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன. இவர் மீது இரண்டு கொலை வழக்குகளும், இரண்டு கொலை முயற்சி வழக்குகளும், நான்கு வழிப்பறி வழக்குகளும், ஒரு வெடிகுண்டு வழக்கும், மூன்று கஞ்சா வழக்குகளும், 10 திருட்டு வழக்குகளும், 10 அடிதடி வழக்குகள் என மொத்தம் 32 வழக்குகள் உள்ளன. இந்நிலையில் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் ஜோஷ்வா தேடப்பட்டு வந்தார். இதற்காக உதவி ஆணையர் செட்ரிக் இமானுவேல் தலைமையில் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஆகியோரைக் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. 
இவர்கள் நடத்திய விசாரணையில் சுங்கம் அருகே ஜோஷ்வா பதுங்கியிருப்பது தெரியவந்தது. போலீஸார் வருவதைப் பார்த்து அங்கிருந்து ஜோஸ்வா தப்பியோட முயன்றபோது தவறி விழுந்ததில் அவருக்கு இடது காலில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜோஷ்வா ஏற்கெனவே இரண்டு முறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT