கோயம்புத்தூர்

கார் கடத்தல் வழக்கு: மேலும் ஒருவர் கைது

23rd Aug 2019 09:21 AM

ADVERTISEMENT

வாடகை கார் ஓட்டுநரைக் கத்தியால் குத்திவிட்டு காரை கடத்திச் சென்ற வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை, சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் வசந்தகுமார் (35). கால் டாக்ஸி ஓட்டுநர். சிங்காநல்லூர் அருகே வசந்தகுமார் புதன்கிழமை அதிகாலை காரை நிறுத்திவைத்திருந்தார். அதிகாலை 2 மணி அளவில் அங்கு வந்த 2 இளைஞர்கள் தாங்கள் மதுரைக்குச் செல்ல வேண்டும் எனக்கூறியுள்ளார். அவர்கள் இருவரையும் வசந்தகுமார் தனது காரில் ஏற்றிக்கொண்டு சூலூர்,  திருச்சி சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது,  2 இளைஞர்களும் வசந்தகுமாரை கத்தியால் குத்தி கீழே தள்ளிவிட்டு காரை ஓட்டிக்கொண்டு தப்பிவிட்டனர்.
  இது குறித்து வசந்தகுமார் தனது செல்லிடப்பேசி மூலமாக கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து, திருப்பூர் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார், திருப்பூர், விஜயாபுரம் அருகே நல்லி கவுண்டன்புதூர் பகுதியில் வந்துகொண்டிருந்த இந்த காரை மடக்கிப் பிடித்தனர். 
 விசாரணையில் பிடிபட்ட நபர் அந்தமான் நிக்கோபார் தீவைச் சேர்ந்த திருமுருகன் (19) என்பதும், காரில் இருந்து தப்பிச் சென்றவர் அதே தீவைச் சேர்ந்த கொங்குசாமி (24) எனவும் தெரியவந்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த சூலூர் போலீஸார் திருமுருகனை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 
  இந்நிலையில், சூலூரை அடுத்த காங்கேயம்பாளையம் பகுதியில் உள்ள அரசு மதுபானக் கூடம் அருகே தனிப்படைப் போலீஸார் கொங்குசாமியைப் பிடிக்க முயன்றனர். அப்போது, தப்பி ஓடும்போது கொங்குமாசி கீழே விழுந்து அடிபட்டார். இதில் அவருக்கு வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.  போலீஸார் அவரை கைது செய்து  சூலூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர் செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கால் டாக்ஸி ஓட்டுநர் வசந்தகுமார் அபாய கட்டத்தை இன்னும் தாண்டவில்லை என போலீஸார் தெரிவித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT