கோவை அருகே மண் எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் லாரி உரிமையாளரைத் தாக்கிய 25 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கோவை, அன்னூர் அருகே பிள்ளையாம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜெயபால் (38). சொந்தமாக லாரிகள் வைத்து தொழில் செய்து வருகிறார். இவர் ஒத்தக்கால்மண்டபம் குப்பனூர் அருகே கிராவல் மண் எடுக்க சனிக்கிழமை சென்றுள்ளார்.
அப்போது, அங்கு இருந்த லாரி உரிமையாளர்களுக்கும், ஜெயபாலுக்கும் இடையே மண் அள்ளுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த லாரி உரிமையாளர்கள் சிலர் உருட்டுக் கட்டையால் ஜெயபாலைத் தாக்கியுள்ளனர்.
படுகாயமடைந்த ஜெயபால், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் கொடுத்த புகாரின் பேரில் அன்னூர் பகுதியைச் சேர்ந்த நடராஜ், ராஜகோபால், அருண், ராஜ்குமார், வடிவேல் உள்ளிட்ட 25 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.