உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள ராஷ்டிரிய மிலிட்டரி அகாதெமியில் 2020 ஆம் கல்வி ஆண்டில் 8 ஆம் வகுப்பு சேர்க்கைக்கு செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள ராஷ்டிரிய மிலிட்டரி அகாதெமியில் ஜூலை 2020 ஆம் கல்வி ஆண்டில் 8 ஆம் வகுப்பு சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான நுழைவுத் தேர்வு டிசம்பர் 1, 2 ஆகியத் தேதிகளில் நடைபெறுகின்றன.
நுழைவுத் தேர்வில் பங்கேற்பவர்கள் 2020 ஜூலை 1 ஆம் தேதி 11.5 முதல் 13 வயதுக்குள் இருக்க வேண்டும். 7 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் கலந்துகொள்ள முடியும். இதற்கான விண்ணப்பம், தகவல் குறிப்பேட்டினை கமாண்டன்ட் ராஷ்டிரிய இந்தியன் மிலிட்டரி கல்லூரி, டேராடூன், உத்தரகண்ட் - 248 003. என்ற முகவரிக்கு கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். பொதுப் பிரிவினர் ரூ. 600, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் ஜாதிச் சான்றுடன் ரூ.555க்கான கேட்பு காசோலை அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்.
தவிர www.rimc.gov.in என்ற இணையதளத்திலும் விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சாலை, பார்க் டவுன், சென்னை - 600 003 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு www.rimc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.