கோயம்புத்தூர்

நகை திருடிய குடுகுடுப்பைக்காரர் கைது

18th Aug 2019 08:50 AM

ADVERTISEMENT

கோவை, சின்னியம்பாளையத்தில் குறி சொல்ல வந்து 13 பவுன் நகையைத் திருடிச் சென்ற குடுகுடுப்பைக்காரரை போலீஸார் கைது செய்தனர்.
 கோவை, சின்னியம்பாளையம், கமலா நகரைச் சேர்ந்தவர் ராம்குமார் (56). இவரது வீட்டுக்கு கிணத்துக்கடவு அருகே சென்ராயம்பாளையம், கொண்டையம்மன் கோயில் வீதியில் வசிக்கும் கணேசன் (24) என்ற குடுகுடுப்பைக்காரர் குறி சொல்வதற்காக அண்மையில் வந்துள்ளார்.
 அப்போது, ராம்குமாரின் மனைவி தனது மகளின் திருமணத்துக்காக வாங்கிய நகைகளை வீட்டு வாசலில் வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார். இதற்கிடையே, குடுகுடுப்பைக்காரரிடம் குறி பார்த்ததற்காக பணம் கொடுத்து அனுப்புமாறு ராம்குமாரின் மனைவி கூறியதைத் தொடர்ந்து பணம் எடுக்க ராம்குமார் வீட்டுக்குள் சென்றுள்ளார்.
 ராம்குமாரின் மனைவி நகைகளை வீட்டின் முன்பு வைத்துவிட்டு, செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டு வீட்டின் பின்புறமாகச் சென்றுள்ளார். அப்போது, அங்கு வைக்கப்பட்டிருந்த நகைகளில் 13 பவுன் நகையை மட்டும் கணேசன் திருடிச் சென்றதாக தெரிகிறது.
 கணேசன் சென்ற பிறகு, ராம்குமாரின் மனைவி நகைகளை வீட்டுக்குள் கொண்டுச் சென்று வைத்துவிட்டார். பின்னர் நகைகளை மீண்டும் வெள்ளிக்கிழமை எடுத்து பார்த்தபோது, அதில் 13 பவுன் மட்டும் காணாமல் போனது தெரியவந்தது.
 இதைத் தொடர்ந்து, சந்தேகத்தின் பேரில் குடுகுடுப்பைக்காரர் மீது ராம்குமார் பீளமேடு போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து, குடுகுடுப்பைக்காரர் கணேசனை போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
 அப்போது, நகையைத் திருடியதை கணேசன் ஒப்புக் கொண்டார். இதையடுத்து, போலீஸார் அவரைக் கைது செய்து, அவரிடம் இருந்து 13 பவுன் நகையைப் பறிமுதல் செய்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT