தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றுஅமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.
வால்பாறை பகுதியில் தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் தங்களுக்கு கூலி உயர்வு அளிக்க வேண்டும் என்று தொழிற்சங்கத்தினர் மூலம் வலியுறுத்தி வருகின்றனர்.சில மாதங்களுக்கு முன்னர், வால்பாறை பகுதி தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு ரூ. 5 கூலி உயர்வு அளிப்பதாக தமிழக முதல்வர் அறிவித்தார். அந்த அறிவிப்புக்குப் பின்னரும் கூலி உயர்வை வழங்க எஸ்டேட் நிர்வாகத்தினர் தொடர்ந்து தாமதித்து வருவதாக தொழிலாளர்கள் குறை கூறி வருகின்றனர்.
இந்நிலையில், வால்பாறைக்கு சனிக்கிழமை வந்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, முதல்வர் அறிவித்த கூலி உயர்வை தொழிலாளர்களுக்கு நிர்வாகத்தினர் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.