அன்னூர் ஒன்றியத்தில் 924 பள்ளி மாணவர்களுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினிகளை சட்டப் பேரவைத் தலைவர் ப.தனபால் சனிக்கிழமை வழங்கினார்.
அன்னூர் ஒன்றியத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழா அன்னூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன் தலைமை வகித்தார்.
அன்னூர் கூட்டுறவு பண்டக சாலையின் தலைவர் அம்பாள் எஸ்.ஏ.பழனிசாமி, கரியாம்பாளையம் கூட்டுறவு சங்கத் தலைவர் ஓ.எஸ்.சாய்செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகன் வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக சட்டப் பேரவைத் தலைவர் ப.தனபால் கலந்துகொண்டு 924 பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். மேலும், மகளிர் திட்டம் சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன்தொகைக்கான வரைவோலையை வழங்கினார்.
மேலும், மானிய விலையில் 94 பெண்களுக்கு இரண்டு சக்கர வாகனங்களும், 21 பயனாளிகளுக்கு பசுமை வீட்டுக்கான ஆணைகளையும் வழங்கினார். இந்த விழாவில் கோவை வடக்கு கோட்டாட்சியர் சுரேஷ், மகளிர் திட்டக் குழு இயக்குநர் செல்வராசு, கூட்டுறவு சங்கத் தலைவர் ஏ.சி.ஈஸ்வரமூர்த்தி, அன்னூர் வட்டாட்சியர் சந்திரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.