கோயம்புத்தூர்

முழு கொள்ளளவை எட்டியது சிறுவாணி அணை: கோவையில் மழை சீரமைப்புப் பணிகள் தீவிரம்

11th Aug 2019 08:10 AM

ADVERTISEMENT

சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 49.53 அடியை எட்டியுள்ளது. ஓராண்டுக்குப் பிறகு அணை நிரம்பியுள்ளதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
கோவையின் பிரதான குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை உள்ளது. இந்த அணையில், கடந்த ஜனவரி மாதம் 19 அடியாக இருந்த நீர்மட்டம் பிப்ரவரி மாதம் இறுதியில் 16 அடியாகச் சரிந்தது. தொடர்ந்து ஏப்ரல், மே மாதங்களில் 100 டிகிரியைத் தாண்டி வெயில் சுட்டெரித்ததால் அணையின் நீர்மட்டம் 13 அடியாகச் சரிந்தது. இதனால், மாநகரில் பல இடங்களில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டது. 
சிறுவாணி குடிநீர் விநியோகிக்கப்பட்ட  பகுதிகளில் பில்லூர் குடிநீர் விநியோகிக்கப்பட்டது. இந்நிலையில், ஜூன் 11இல் தென்மேற்குப் பருவ மழை தொடங்கியது. ஜூலை 10-ஆம் தேதி முதல் பருவ மழை தீவிரமடைந்து நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து 1 மாதமாக கனமழை பெய்து வருகிறது. வியாழக்கிழமை நிலவரப்படி, நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் 300 மி.மீ., அடிவாரத்தில் 101 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. கடந்த ஓராண்டில் சிறுவாணியில் பெய்துள்ள அதிகபட்ச மழைப்பொழிவு இதுவாகும். 
தொடர் கனமழையால், புதன்கிழமை 34 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை 7 அடி அதிகரித்து 41 அடியாக உயர்ந்தது. சனிக்கிழமை இரவு 7 மணி நிலவரப்படி நீர் மட்டம் 49 அடியை எட்டியுள்ளது. இது அணையின் முழுக் கொள்ளளவு ஆகும். 
இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில், பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் 3 நாள்களில்  நீர்மட்டம் 16 அடி அதிகரித்து முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு ஜூலைக்குப் பிறகு தற்போதுதான் சிறுவாணி அணை நிறைந்துள்ளது என்றனர். 
வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை காலி செய்ய எச்சரிக்கை: 
கோவை, சிங்காநல்லூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் 960 வீடுகள் உள்ளன. இதில் 450க்கும் மேற்பட்ட வீடுகள் சிதிலமடைந்து காணப்படுகின்றன. இதனால் இங்குள்ள மக்களை வீடுகளைக் காலி செய்யுமாறு கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், கோவை மாநகரில் வியாழக்கிழமை முதல் 2 நாள்கள் பெய்த தொடர் மழையால் அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி, மாவட்ட நிர்வாக அதிகாரிகள், சிங்காநல்லூர் வீட்டு வசதி வாரியக் குடியிருப்புப் பகுதிகளில் வாகனப் பிரசாரம் மேற்கொண்டனர்.
 அதில், வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் வசிப்பவர்கள், கட்டடத்தின் அபாய நிலையைக் கருதி உடனே காலி செய்ய வேண்டும். அசம்பாவிதம் ஏற்பட்டால் பாதிக்கப்படுபவர்களுக்கு, வருவாய்த் துறை சார்பில் நிதியுதவிகள் வழங்கப்பட மாட்டாது என எச்சரிக்கப்பட்டது. 
மரங்கள் விழுந்து பாதிப்பு
கோவை மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை தொடங்கிய மழை  வெள்ளிக்கிழமை இரவு வரை தொடர்ந்து பெய்தது. இதில் புலியகுளம் பகுதியில் சனிக்கிழமை காலை சாலையோரத்தில் இருந்த பழைமையான மரம் வேரோடு சாய்ந்தது. மாநகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று மரத்தை வெட்டி அகற்றினர். கோவை புரூக்பீல்டு சாலையில், சாலையோரத்தில் இருந்த மரம் வேரோடு சாய்ந்து அவ்வழியாகச் சென்ற சரக்கு ஆட்டோ மீது விழுந்தது. இதில், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் காயமின்றித் தப்பினர். 
மாநகரில் வியாழக்கிழமை காலை முதல் சனிக்கிழமை மாலை வரை 10 -க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தும், முறிந்தும் விழுந்துள்ளன. நகரில் பெய்த தொடர் மழையால், சிங்காநல்லூர் - வெள்ளலூர் இணைப்புச் சாலையில் உள்ள நொய்யல் ஆற்றுப்பாலம் வெள்ளிக்கிழமை மூழ்கியது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து முழுவதுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சனிக்கிழமை காலை முதல் அப்பகுதியில், மாநகராட்சி ஊழியர்கள் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 
நகரம் மற்றும் புறநகரங்களில் சனிக்கிழமை காலையில் மழை ஓய்ந்து, குளிர்ந்த சீதோஷ்ண நிலை காணப்பட்டது. ஒரு சில இடங்களில் மட்டும் தூறல் மழை பெய்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சாலை சீரமைப்பு, பாலம் துண்டிப்பு உள்ளிட்ட பாதிப்புகளை, மாநகராட்சி, நகரம், பேரூராட்சி ஊழியர்கள் சரிசெய்து வருகின்றனர். நொய்யலாற்றில் வெள்ளத்தின் அளவு குறைந்து 1,750 கன அடியாக இருந்தது. 

வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை காலி செய்ய எச்சரிக்கை: 
கோவை, சிங்காநல்லூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் 960 வீடுகள் உள்ளன. இதில் 450க்கும் மேற்பட்ட வீடுகள் சிதிலமடைந்து காணப்படுகின்றன. இதனால் இங்குள்ள மக்களை வீடுகளைக் காலி செய்யுமாறு கடந்த 2015}ஆம் ஆண்டு முதல் அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், கோவை மாநகரில் வியாழக்கிழமை முதல் 2 நாள்கள் பெய்த தொடர் மழையால் அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி, மாவட்ட நிர்வாக அதிகாரிகள், சிங்காநல்லூர் வீட்டு வசதி வாரியக் குடியிருப்புப் பகுதிகளில் வாகனப் பிரசாரம் மேற்கொண்டனர்.
 அதில், வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் வசிப்பவர்கள், கட்டடத்தின் அபாய நிலையைக் கருதி உடனே காலி செய்ய வேண்டும். அசம்பாவிதம் ஏற்பட்டால் பாதிக்கப்படுபவர்களுக்கு, வருவாய்த் துறை சார்பில் நிதியுதவிகள் வழங்கப்பட மாட்டாது என எச்சரிக்கப்பட்டது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT