பில்லூர் அணையில் இருந்து பவானி ஆற்றில் சனிக்கிழமை மாலை நிலவரப்படி விநாடிக்கு 20,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியுள்ள கேரள மாநிலப் பகுதிகள், தமிழகத்தின் நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பில்லூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்தது. இந்நிலையில் அணையில் இருந்து அதிகபட்சமாக விநாடிக்கு 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. தொடர்ந்து 5ஆவது நாளாக சனிக்கிழமை காலை வரை 20 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இந்நிலையில் நீலகிரி, கேரளப் பகுதிகளில் இருந்து பில்லூர் அணைக்கு வரும் நீரோடை பகுதிகளில் மழையின் அளவு சற்று குறையத் தொடங்கியது. இதனால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவும் குறைந்ததால் சனிக்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி விநாடிக்கு 20,000 கன அடி தண்ணீர் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.
கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு அடுத்த இரு நாள்களுக்கு மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் மேட்டுப்பாளையம், ஆலாங்கொம்பு, சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் கரையோரம், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.