கோவை பி.எஸ்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியில் கல்வெட்டியல் பட்டயப் படிப்புப் பிரிவு, தமிழ்த் துறை ஆகியவற்றின் சார்பில் 29-ஆம் ஆண்டு தொல்லியல் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
தொடக்க விழாவில் கல்லூரிச் செயலர் தி.கண்ணையன் தலைமை உரையாற்றினார். கல்வெட்டியல் துறை முன்னாள் தலைவர் ஏ.சுப்பராயலு நோக்க உரையாற்றினார். கடந்த ஆண்டில் கண்டறியப்பட்ட தொல்லியல் பொருள்கள் குறித்த வரலாற்றுச் செய்திகள் 30-ஆவது ஆவணத்தில் வெளியிடப்பட்டன. இந்த இதழை கல்வெட்டு ஆய்வாளர் செந்தீ நடராஜன் வெளியிட, அதை பொறியாளர் வெங்கடேசன் ரவி பெற்றுக் கொண்டார்.
சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் சோ.பத்மாவதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இணைப் பேராசிரியரும், கல்வெட்டியல் பட்டயப் படிப்பின் பொறுப்பாசிரியருமான ச.ரவி, கருத்தரங்கின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார்.
இரண்டாம் நாள் நிகழ்வில் கல்லூரி முதல்வர் து.பிருந்தா வாழ்த்துரை வழங்கி, பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். இந்த கருத்தரங்கில், தொல்லியல் பணிகளுக்காக அறிஞர் பூங்குன்றன் பாராட்டி கெளரவிக்கப்பட்டார்.
நிகழ்ச்சியில், நாணய ஆய்வாளர் ஆறுமுக சீதாராமன், தமிழகக் காசுகளில் எழுத்துகள் என்ற தலைப்பிலும், பொறியாளர் கோமகன், கோவில் தோற்றம், வளர்ச்சியில் கண்காணிப்பு அதிகார அரசியல் என்ற தலைப்பிலும் அறக்கட்டளைச் சொற்பொழிவாற்றினர்.
இதில், முன்னாள் தொல்லியல் அலுவலர் வேதாசலம், பேராசிரியர் சு.ராசவேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கருத்தரங்கையொட்டி பேரூர் பட்டீசுவரர் கோயில் கல்வெட்டுகள், சிற்பக் கலைகள் குறித்த களப்பணி பயணம் மேற்கொள்ளப்பட்டது.
கருத்தரங்கில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் 350-க்கும் மேற்பட்ட தொல்லியல் துறை ஆர்வலர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், 30-க்கும் மேற்பட்ட கட்டுரையாளர்கள் தங்களது கண்டுபிடிப்புகளை வெளியிட்டனர்.