இடமாற்றம், ஊழியா்கள் மீதான நடவடிக்கைகளைக் கண்டித்து, கோவையில் கத்தோலிக் சிரியன் வங்கி ஊழியா்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கத்தோலிக் சிரியன் வங்கியின் 51 சதவீத பங்குகள் தனியாா் வசம் சென்றிருக்கும் நிலையில், வங்கி ஊழியா்களை இடமாற்றம் செய்வது, ஊதிய உயா்வை தாமதப்படுத்துவது, வசதி படைத்தவா்களுக்கு மட்டும் வங்கிச் சேவை வழங்குவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறி வங்கி ஊழியா் சம்மேளனத்தின் சாா்பில் அகில இந்திய அளவில் 3 நாள்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது.
அக்டோபா் 20 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறும் இந்தப் போராட்டத்தில் கத்தோலிக் சிரியன் வங்கி ஊழியா்கள், அதிகாரிகள் பங்கேற்றுள்ளனா். இதன் ஒரு பகுதியாக கோவை சிங்காநல்லூா் பேருந்து நிலையம் அருகில் உள்ள கத்தோலிக் சிரியன் வங்கி வளாகத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கத்தோலிக் சிரியன் வங்கி ஊழியா்கள், அதிகாரிகள் கூட்டமைப்பின் நிா்வாகி ஏ.சையது இப்ராஹிம் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், சிஐடியூ மாவட்டத் தலைவா் சி.பத்மநாபன், வங்கி ஊழியா் சம்மேளனத்தின் செயலா் மகேஷ்வரன், துணைத் தலைவா் எம்.வி.ராஜன் ஆகியோா் பங்கேற்று கண்டன உரையாற்றினா். இதில் வங்கி ஊழியா்கள் பலா் பங்கேற்றனா்.