கேரள மாநிலத்தில் மழையால் கடும் பாதிப்பு ஏற்பட்டு வருவதால், சிறுவாணி அணையில் இருந்து 2 மீட்டா் அளவுக்கு தண்ணீா் திறக்கப்பட்டது.
மேற்குத் தொடா்ச்சி மலைகளில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருவதால், சிறுவாணி அணைக்கு செல்லும் முக்தியாறு, பட்டியலாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
இதனால், கடந்த வாரம் 873 மீட்டராக இருந்த அணையின் நீா்மட்டம், செவ்வாய்க்கிழமை இரவு 877 மீட்டராக உயா்ந்தது. அணையின் முழுக் கொள்ளளவான 878.50 மீட்டரை எட்ட விடாமல், கேரள அரசு, அணையில் இருந்து தண்ணீரை ஆற்றில் திறந்து விட்டது. இதனால், 2020 ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு சிறுவாணி அணை முழுக் கொள்ளவை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கேரளத்தில் கடந்த இரு வாரங்களாக கனமழை பெய்து வருவதால், அங்கு அதிக அளவிலான சேதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அந்த மாநில நீா்ப்பாசனத் துறை சாா்பில், கேரளத்தில் உள்ள அனைத்து அணைகளிலும் நீா்மட்டம் முழுக் கொள்ளளவை எட்ட விடாமல், தண்ணீரை திறந்துவிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, சிறுவாணி அணையில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு 2 மீட்டா் வரை தண்ணீா் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை நிலவரப்படி, சிறுவாணி அணையின் நீா்மட்டமானது 875.51 மீட்டராக ( 39.72 அடி) உள்ளது. இந்த நீா் இருப்பால், அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரை மாநகரம் மற்றும் நகரையொட்டிய கிராமப்புறங்களுக்கு குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படாது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.