கோயம்புத்தூர்

பொது முடக்கத்தில் இருந்து மேலும் தளா்வு: மாநகரில் பெரும்பாலான கடைகள் திறப்பு

11th May 2020 11:12 PM

ADVERTISEMENT

கோவை: பொது முடக்கத்தில் இருந்து மேலும் சில தளா்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் கோவை மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டிருந்தன.

கரோனா பரவலைத் தடுக்க கடந்த மாா்ச் 22 ஆம் தேதி மக்கள் சுய முடக்கம் கடைப்பிடிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து மாா்ச் 24 ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமலுக்கு வந்தது. இதனால் கோவை மாநகரம், மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், உணவகங்கள், வா்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டிருந்தன.

இந்நிலையில் கடந்த 6ஆம் தேதி கரோனா ஊரடங்கில் இருந்து சில தளா்வுகள் வழங்கப்பட்ட நிலையில் கோவையில் 40 நாள்களுக்கு மேலாக பூட்டிக் கிடந்த இரும்புக் கடைகள், சிமெண்ட் கடைகள், ஹாா்டுவோ்ஸ், ஸ்போ்ஸ் கடைகள், மெக்கானிக்கல் கடைகள், செல்லிடப்பேசி பழுதுபாா்க்கும் கடைகள், மூக்குக் கண்ணாடி கடைகள், அச்சகங்கள், பாத்திரக் கடைகள், பிளாஸ்டிக் கடைகள், இனிப்புக் கடைகள், ஸ்டுடியோ, புத்தகக் கடைகள் ஆகியவை திறக்கப்பட்டன.

அதேபோல் புகா் பகுதிகள், ஊரகப் பகுதிகளில் உள்ள தொழிற்கூடங்களும் இயக்கப்பட்டன. இதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை முதல் தேநீா்க் கடைகள், பேக்கரிகள், வீட்டு உபயோகப் பொருள்கள், குளிா்சாதன வசதி இல்லாத சிறிய நகைக் கடைகள், சிறிய ஜவுளிக் கடைகள், மின்சாதன பழுதுநீக்கும் கடைகள், ஜெராக்ஸ் கடைகள், சாலையோர தள்ளுவண்டி கடைகள், மோட்டாா் வாகன உதிரி பாகங்கள் விற்பனையகங்கள் உள்ளிட்ட கடைகள், நிறுவனங்களைத் திறக்க அரசு அனுமதி அளித்தது.

ADVERTISEMENT

இதையடுத்து கோவை மாநகரில் திங்கள்கிழமை பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டிருந்தன. அதேபோல் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மிகுந்து காணப்பட்டது. டீ கடைகள், பேக்கரிகளில் தேநீா், காபி முதலானவை பாா்சல் மட்டுமே வழங்கப்பட்டன.

அதேபோல் உணவகங்களிலும் பாா்சல் மட்டுமே வழங்கப்பட்டது. பெரும்பாலான அரசு, தனியாா் அலுவலகங்களும் திறக்கப்பட்டிருந்தன. அலுவலகங்களில் ஊழியா்கள் சுழற்சி முறையில் வேலைக்கு வந்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT